சென்னை:அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதலமைச்சராக நியமிக்கப்படுவார் என கடந்த சில வாரங்களாகவே தகவல்கள் வெளிவந்த நிலையில், முதலமைச்சரின் இன்றைய செய்தியாளர் சந்திப்பு அதற்கான முற்றுப்புள்ளி வைத்திருப்பதாகவே அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் துணை முதல்வர் தொடர்பான தகவல் குறித்த விரிவான கட்டுரையை தற்போது பார்க்கலாம்.
நான்காம் ஆண்டில் திமுக: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவை பொறுப்பேற்று மூன்றாண்டுகளை நிறைவு செய்து நான்காம் ஆண்டு நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்ற பின் கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்கத்தில், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்றார்.
திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து, இதுவரை மூன்று முறை அமைச்சரவை மாற்றம் நடைபெற்றுள்ள நிலையில், தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், அதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்படுவார் என்றும் கடந்த சில வாரங்களாகவே தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன.
நிர்வாகிகள் முதல் அமைச்சர்கள் வரை:திமுகவில் அதன் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் இடையே செல்வாக்கு மிகுந்தவராக வலம் வருகிறார்.
உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற போது அமைச்சராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்போது அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை இருப்பினும் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்கத்தில் இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதேபோல, கடந்த ஆறு மாதத்திற்கும் மேலாகவே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டும் என நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் தரப்பிலிருந்து கருத்துகள் வரத்தொடங்கியது. அதனை வெளிப்படுத்தும் விதமாக, மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக வரவேண்டும் என பொதுமக்களும் தொண்டர்களும் விரும்புவதாகக் கூறினார்.
அதேபோல, கடந்த மாதம் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு துணை முதலமைச்சராக இருப்பவர் உதயநிதி ஸ்டாலின் தான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்ட நிகழ்ச்சியிலேயே பேசியது கவனத்தை ஈர்த்தது.