கடலூர்:உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் திருக்கோவிலில் ஆண்டுக்கு ஆறுமுறை மகா அபிஷேகங்கள் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக ஆனித்திருமஞ்சனம் மற்றும் மார்கழி ஆருத்ர தரிசன விழாவின்போது உற்சவர் நடராஜப் பெருமானே கருவறையிலிருந்து வெளியே வந்து பக்தர்களுக்குக் காட்சியளிப்பார்.
இந்த ஆண்டு ஆனித் திருமஞ்சன தரிசன விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது. நடராஜர் சன்னதி முன்பு உள்ள கொடிமரத்தில் வேத மந்திரங்கள் முழங்க கிருஷ்ணசாமி தீட்சிதரால், கொடிமரம் ஏற்றப்பட்டு தீபாராதனைகள் காட்டப்பட்டன. பத்து நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் ஒவ்வொரு நாளும் சுவாமி வீதி உலா வர உள்ளது.
குறிப்பாக, நாளை நான்காம் தேதி சந்திர பிறை வாகன வீதி உலா, ஐந்தாம் தேதி தங்க சூரிய பிறை வாகன வீதி உலா, ஆறாம் தேதி வெள்ளி பூத வாகன வீதி உலா, ஏழாம் தேதி வெள்ளி ரிஷப வாகன வீதி உலா, எட்டாம் தேதி வெள்ளி யானை வாகன வீதி உலா, ஒன்பதாம் தேதி தங்க கைலாச வாகன வீதி உலா, பத்தாம் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதி உலா நடைபெற உள்ளது.