கடலூர்:உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் திருக்கோயிலில் ஆண்டுக்கு ஆறுமுறை மகா அபிஷேகங்கள் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக, ஆனித்திருமஞ்சனம் மற்றும் ஆருத்ர தரிசன விழாவின்போது மூலவரும் உற்சவருமான நடராஜப் பெருமானே கருவறையிலிருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
இந்தாண்டு ஆனித் திருமஞ்சன தரிசன விழா கடந்த மூன்றாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் விழாவில் ஒவ்வொரு நாளும் சுவாமிகள் வீதி உலா என்பது சிறப்பாக நடைபெற்றது. குறிப்பாக, 4ம்தேதி சந்திர பிறை வாகன வீதி உலா, ஐந்தாம் தேதி தங்க சூரிய பிறை வாகன வீதி உலா, ஆறாம் தேதி வெள்ளி பூத வாகன வீதி உலா, ஏழாம் தேதி வெள்ளி ரிஷப வாகன வீதி உலா, எட்டாம் தேதி வெள்ளி யானை வாகன வீதி உலா, ஒன்பதாம் தேதி தங்க கைலாச வாகன வீதி உலா, பத்தாம் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதி உலா நடைபெற்றது.
முக்கிய விழாவான தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. மூலவர்களான ஸ்ரீ நடராஜ மூர்த்தி, ஸ்ரீ சிவகாமி சுந்தரி மற்றும் உற்சவர்கள் சுப்பிரமணியர், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் மேல தாளத்துடன், வேத மந்திரங்கள் ஓதிட தனித்தனி தேர்களில் எழுந்தருளி கீழவீதி தேரடி நிலையில் இருந்து புறப்பட்டது.