சென்னை: சென்னை தியாகராய நகர் ராகவய்யா சாலையில் பிரசித்தி பெற்ற ஹயக்ரீவர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் சத்தீஸ்கரைச் சேர்ந்த தினகர் திரிபாதி (25) என்பவர், கடந்த ஏப்.14ஆம் தேதி சமையல் உதவியாளராக பணிக்கு சேர்ந்துள்ளார்.
இதனையடுத்து, ஏப்ரல் 19ஆம் தேதி மாலையிலிருந்து தினகரை திடீரென காணவில்லை எனத் தெரிகிறது. மேலும், ஹயக்ரீவர் சிலையிலிருந்த 20 சவரன் தங்க நகைகள் காணாமல் போனதையடுத்து, கண்காணிப்பு கேமராக்களை கோயில் நிர்வாகம் ஆய்வு செய்துள்ளது. அப்போது தினகர் திரிபாதி நகைகளைத் திருடியது தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக கோயில் அறக்கட்டளை மேலாளர் மதுசூதன் பட், பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தினகர் திரிபாதியைத் தேடி வந்தனர். இந்நிலையில், தினகர் திருடிய நகைகளை ரூ.6 லட்சத்திற்கு விற்றுவிட்டு, சொந்த ஊருக்குச் சென்று நண்பர்களுடன் ஆனந்தமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், சொந்த ஊரிலிருந்தால் பணம் அனைத்தையும் நண்பர்கள் காலி செய்து விடுவார்கள் என எண்ணி, மீதமுள்ள பணத்தை வைத்து, சென்னையில் சுய தொழில் செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்ற நோக்கத்தில் வாடகைக்கு கடை பார்த்துக் கொண்டிருந்துள்ளார். அந்த நேரத்தில் தான் போலீசார் தினகரை கைது செய்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:குடிநீர் விநியோகம் விவகாரம்; மத்திய ஜிஎஸ்டி கூடுதல் ஆணையர் பிறப்பித்த உத்தரவு ரத்து- சென்னை உயர் நீதிமன்றம்! - Madras High Court