தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் ஆடிப்பெருக்கு திருவிழா: கிராமத்தையே கண் முன் நிறுத்திய மாணவிகள்! - Aadi Perukku

aadi perukku festival: சென்னையில் உள்ள கல்லூரியில் ஆடித்திருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. மாணவிகள் பரதநாட்டியம், கும்மியாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய நடனங்களை அரங்கேற்றி அசத்தினர்.

கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள்
கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 3, 2024, 9:42 AM IST

சென்னை:ஆடி திருவிழா என்றாலே நமக்கு நியாபகம் வருவது கிராமத்தில் நடைபெறும் அம்மன் திருவிழா தான். தங்களது சொந்த ஊரை விட்டு வெளியூரில் வேலை செய்பவர்கள், படிப்பவர்கள் என அனைவரும் ஊர் திருவிழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப் படுவர். அப்படிப்பட்ட நமது ஆடித்திருவிழா சென்னை பெருநகரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சென்னை கல்லூரி ஆடிப்பெருக்கு விழா (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னையில் உள்ள எம்ஜிஆர் ஜானகி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் ஆடித் திருவிழாவைக் கொண்டாடினர். இந்த திருவிழாவானது வருடந்தோறும் இந்த கல்லூரியில் கொண்டாடப்படுகிறது. நேற்று நடைபெற்ற திருவிழாவில் 4000 மாணவிகள் கலந்துகொண்டனர். "தண்ணீரை சேமித்தல்" என்ற தலைப்பில் ஆடிப்பெருக்கு கொண்டாட்டம் நடைபெற்றது.

இந்த கொண்டாட்டத்தில் ஒன்பது வகையான தானியங்களை வளரச்செய்து மண் பானைகளில் ஏந்தி 'முளைப்பாரி' வழிபாட்டில் பங்கேற்றனர். மேலும், கல்லூரி வளாகத்தில் உள்ள சிறு குளத்தில் மாணவிகள் அகல் விளக்குகளில் தீபமேற்றி மிதக்க விட்டனர். பின்னர், மாணவிகள் "சித்ரா அன்னம்" என்று சொல்லக்கூடிய எலுமிச்சை சோறு, புளி சோறு, தேங்காய் சோறு ஆகியவற்றை பகிர்ந்துண்டனர்.

இந்த விழாவில் 'தண்ணீரை சேமித்தல்' என்ற தலைப்பை மையப்படுத்தி பரதநாட்டியம், கும்மியாட்டம், தப்பாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், மௌனமொழி நாடகம், குழு நடனம் ஆகிய கலைகளை அரங்கேற்றினர். இந்த விழா குறித்து கல்லூரி மாணவிகளும் ஆசிரியரும் நமது ஈடிவி பாரத் தமிழுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது பேசிய மாணவி இனியா, "ஆடிப்பெருக்கு திருநாளை முன்னிட்டு எங்கள் கல்லூரியில் கோலாகலமாக திருவிழாவைக் கொண்டாடுகிறோம். கிராமத்தில் கொண்டாடுவது போல பாரம்பரியமான முறையில் விழா ஏற்பாடு செய்துள்ளோம்.

இந்த விழா மழைக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், விவசாயிக்கு நன்றி செலுத்தும் வகையிலும் முளைப்பாரி, குளத்தில் தீபமேற்றுதல், உணவை பகிர்ந்துண்டோம். அனைத்து மதங்களை சேர்ந்தவர்களும் இந்த திருவிழாவைக் கொண்டாடுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது" என்றார்.

பின்னர் பேசிய விழாவை ஒருங்கிணைத்த மாணவிகள், "எப்பொழுதும் எங்கள் கல்லூரியில் ஆடிப்பெருக்கு கொண்டாட்டம் சிறப்பாக நடைபெறும். இந்த வருடமும் அதே போல நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த விழாவிற்கு அனைத்து மாணவிகளும் பாரம்பரிய உடையை அணிந்து வந்துள்ளோம். இதன் பின்னர் மாணவிகளின் திறமையை வெளிக்காட்டும் விதமாக நடனம், சிலம்பம், கரகாட்டம் போன்ற கலைகளை வெளிப்படுத்தினர், மேலும் பல போட்டிகளும் நடத்தி வருகிறோம்" என்றார்.

மாணவி காயத்ரி கூறுகையில், "இந்த கொண்டாட்டம் எல்லாமே புதிதாக உள்ளது, நாங்கள் பார்த்ததே இல்லை. ஆடி திருவிழா என்ற வார்த்தையே இங்குதான் கேள்விப்படுகிறேன். நிறைய போட்டிகளும், நிகழ்ச்சிகளும் வைக்கின்றனர். பார்க்கவே மிகவும் அருமையாக உள்ளது" என்று கூறினார்.

இவர்களை தொடர்ந்து உதவி பேராசிரியர் சர்ஜனா பேசுகையில், "இந்த வருடம் 'Save Water' என்ற தலைப்பில் பிரம்மாண்டமாக நடத்திவருகிறோம். நிகழ்ச்சிகளில் நல்ல கருத்தை தலைப்பாய் வைத்தால் மாணவர்களிடம் எளிதில் கொண்டு சேர்த்துவிடலாம் என்று நாங்கள் எல்லா கொண்டாட்டங்களிலும் கருத்தை மையமாக வைக்கிறோம். ஒரு புறம் பயங்கரமாக வெள்ளம் வந்துகொண்டிருக்கிறது, ஒரு புறம் தண்ணீரே இல்லை, நீரை சேமிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

மாணவர்கள் இங்கு பல நடன கலைகளை நமக்கு வெளிப்படுத்தினர். இங்கு நிறைய பேர் நமது பாரம்பரிய கலைகளை மறந்திருப்போம். எனவே பாரம்பரியத்தை மறக்க கூடாது என்ற வகையில் கிராமத்தில் இருக்கக்கூடிய கலாச்சாரத்தை இங்கு அனைவரிடமும் கொண்டு வந்துள்ளோம்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஆடி அமாவாசை Vs மற்ற அமாவாசை.. சிறப்புகளும் ஆன்மீகமும் என்ன?

ABOUT THE AUTHOR

...view details