சென்னை:சென்னையில் இருந்து மதுரை செல்லும் ஏர் இந்தியா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் இன்று (அக்.5) மதியம் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. விமானத்தில் காங்கிரஸ் எம்.பி கார்த்திக் சிதம்பரம் உட்பட 117 பயணிகள், 7 விமான ஊழியர்கள் மொத்தம் 124 பேர் இருந்தனர்.
நடு வானில் தத்தளித்த விமானம்:ஏர் இந்தியா பயணிகள் விமானம் நடு வானில் பறந்து கொண்டு இருந்தபோது தலைமை விமானியின் கட்டுப்பாட்டு அறைக்கு விமானத்தில் மிகப்பெரிய அளவில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது என்று அபாய எச்சரிக்கை சிக்னல் வந்துள்ளது.
இதையடுத்து பரபரப்படைந்த தலைமை விமானி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். பின் அந்த விமானத்தை மீண்டும் சென்னை விமான நிலையத்தை நோக்கி இயக்கி அவசரமாக தரையிறங்குவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் துரிதமாக செய்யப்பட்டன.
இதையும் படிங்க:அடர் பனி பிரதேசத்தில் விழுந்து நொறுங்கிய ராணுவ விமானம்: 56 ஆண்டுகளுக்கு பிறகு 4 வீரர்களின் சடலங்கள் கண்டெடுப்பு!
மீண்டும் சென்னைக்கே திரும்பிய விமானம்:அதையடுத்து விமானம் இன்று பகல் 1 மணி அளவில் சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு திரும்பி வந்து பத்திரமாக தரையிறங்கியது. இதையடுத்து பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து அவசரமாக கீழே இறக்கப்பட்டு விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டனர்.
விமானி சுதாரிப்பால் சேதம் தவிர்ப்பு:பின் அதிகாரிகள் அந்த விமானத்தை பழுது பார்க்கும் பணியில் ஈடுப்பட்டனர். அதோடு பயணிகள் அனைவரையும் மாற்று விமானம் மூலம் மதுரைக்கு அனுப்பி வைக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இவ்வாறு ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் ஏற்பட்ட திடீர் இயந்திர கோளாறு குறித்து விமானிக்கு தகுந்த நேரத்தில் தகவல் கிடைத்ததால் விமானி எடுத்த துரித நடவடிக்கையால் விமானம் மிகப்பெரிய ஆபத்தில் இருந்து தப்பித்து நல்வாய்ப்பாக 124 பேரை பாதுகாப்பாக தரையிறங்கினர்.
இதனிடையே இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு டெல்லியில் உள்ள டைரக்டர் ஜெனரல் ஆஃப் சிவில் ஏவியேஷன் சென்னை விமான நிலைய நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்