சென்னை:அந்தமானில் சூறைக்காற்று மழை பெய்யும் மோசமான வானிலை நிலவுவதால், சென்னையில் இருந்து 138 பயணிகளுடன் அந்தமான் சென்ற ஏர் இந்தியா பயணிகள் விமானம் அங்கு தரையிறங்க முடியாமல் மீண்டும் சென்னைக்கு திரும்பிய நிலையில், விமானம் மீண்டும் நாளை காலை அந்தமான் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து அந்தமான் செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானம், இன்று (சனிக்கிழமை) காலை 5.30 மணிக்கு 138 பயணிகளுடன் அந்தமானுக்கு புறப்பட்டுச் சென்றது. அந்த விமானம் காலை 7.30 மணியளவில் அந்தமான் வான் வெளியை நெருங்கியுள்ளது. அப்போது அங்கு அதிகமான சூறைக்காற்றுடன் மோசமான வானிலை நிலவியுள்ளது.
இதனால் ஏர் இந்தியா விமானம், அந்தமானில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரமாக வானில் வட்டமடித்து கொண்டிருந்துள்ளது. மேலும், அந்தமானில் வானிலை சீரடையாததால், விமானி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டுள்ளார். இதனையடுத்து, விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், விமானத்தை அந்தமானில் தரையிறக்காமல் மீண்டும் சென்னைக்கு திருப்புமாறு அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி, விமானம் இன்று காலை 11.15 மணியளவில் சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்தடைந்தது.
இதனையடுத்து, விமானம் இன்று ரத்து செய்யப்படுவதாகவும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை விமானம் மீண்டும் அந்தமான் புறப்பட்டுச் செல்லும். மேலும், பயணிகள் இன்று வாங்கிய பயண டிக்கெட்டில் அந்தமான் பயணம் செய்யலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், பயணிகள் நாங்கள் வெளியூரிலிருந்து வந்திருக்கிறோம். எனவே, எங்களுக்கு தங்குவதற்கு இட வசதி ஏற்பாடுகள் செய்து கொடுங்கள் என்று அதிகாரிகளிடம் கேட்டுள்ளனர். இதற்கு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்ததால், பயணிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.