சென்னை:சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தில் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கின் விசாரணையைத் தள்ளி வைக்கக்கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்த சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் செந்தில் பாலாஜியை நாளை (பிப்.16) நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் 2023 ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத் துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கில் ஜனவரி 22ஆம் தேதி குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யத் தேதி நிர்ணயிக்கப்பட்ட நிலையில், போக்குவரத்துக் கழகங்களில் வேலை வாங்கி தருவதாகக் கூறி மோசடி செய்ததாகச் சென்னை மத்திய குற்றப்பிரிவில் பதிவு செய்யப்பட்ட 3 வழக்குகளின் விசாரணை முடியும் வரை, அமலாக்கத் துறை தாக்கல் செய்த இந்த வழக்கின் விசாரணையைத் துவங்கக் கூடாது என்றும், விசாரணையைத் தள்ளிவைக்க வேண்டும் என்றும் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எஸ்.அல்லி முன்பு நடைபெற்ற போது செந்தில் பாலாஜி சார்பில், மத்திய குற்றப்பிரிவு வழக்கில் செந்தில் பாலாஜி விடுவிக்கப்படும் பட்சத்தில் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்ததே செல்லாததாகிவிடும் எனக் கூறினார்.