சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இந்த நிலையில், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இன்று இந்த மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில், செந்தில் பாலாஜி தரப்பில் புதிதாக இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. அதில், “வங்கி தொடர்பான அசல் ஆவணங்களுக்கும், அமலாக்கத்துறை வழங்கிய ஆவணங்களுக்கும் வேறுபாடுகள் இருப்பதால், தங்களுக்கு வழங்கிய ஆவணங்களை தடய அறிவியல் துறை ஆய்வுக்கு அனுப்பி அந்த ஆவணங்களின் உண்மைத் தன்மையை ஆராய உத்தரவிட வேண்டும்.
மேலும், வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்து உத்தரவு பிறப்பிக்க உள்ள நிலையில், வழக்கில் மீண்டும் தங்கள் தரப்பு வாதங்களை முன் வைக்க அனுமதிக்க வேண்டும்” என்று மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்நிலையில், இந்த மனுக்கள் நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது, செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கறிஞர் ம.கெளதமன் ஆஜராகி, அமலாக்கத்துறையால் தங்களுக்கு வழங்கபட்ட ஆவணங்களில் கையால் எழுதி திருத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதனையடுத்து, அமலாக்கத்துறை தரப்பில் வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆஜராகி, “இந்த மனுக்கள் விசாரணைக்கு உகந்ததல்ல, ஆவணங்கள் அனைத்தும் வங்கியில் இருந்து பெறப்பட்டது. விசாரணையை நீண்ட காலம் இழுத்தடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இதுபோன்ற மனுக்களை செந்தில் பாலாஜி தரப்பினர் தாக்கல் செய்து வருவதால் இந்த மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜி தாக்கல் செய்த இரண்டு புதிய மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதி, வழக்கில் குற்றச்சாட்டு பதிவிற்கு செந்தில் பாலாஜியை வருகிற 22ஆம் தேதி நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:இரண்டு புதிய மனுக்களை தாக்கல் செய்த செந்தில் பாலாஜி; அமலாக்கத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!