தமிழ்நாடு

tamil nadu

ஜாபர் சாதிக்கை மேலும் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி! - Jaffer Sadiq Case

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 19, 2024, 7:09 PM IST

Jaffer Sadiq: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கை மேலும் நான்கு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Jaffer Sadiq
ஜாபர் சாதிக் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள்களை கடத்தியதாக மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினரால் கடந்த மார்ச் மாதம் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டு, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர், சட்ட விரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கூறி அமலாக்கத்துறையும் தனியாக வழக்குப்பதிவு செய்து, கடந்த ஜூன் 26ஆம் தேதி திகார் சிறையில் கைது செய்தது. இந்த வழக்கு தொடர்பாக ஜாபர் சாதிக்கை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க கோரி அமலாக்கத்துறை தரப்பில் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஜாபர் சாதிக் நீதிபதி முன்பு நேரில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டது. அதன்படி, அமலாக்கத்துறை காவல் முடிந்து இன்று (ஜூலை 19) ஜாபர் சாதிக் மீண்டும் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், விசாரணை நிறைவடையாததால் கூடுதலாக 12 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார். இதனை ஏற்க மறுத்த நீதிபதி, மேலும் நான்கு நாட்கள் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

அதன்பின், மீண்டும் ஜூலை 23ஆம் தேதி மாலை 5 மணிக்குள் ஜாபர் சாதிக்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். இதனையடுத்து, நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு ஜாபர் சாதிக் அழைத்துச் செல்லப்பட்டார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. சாதியப் பெயரோடு வந்த கடிதத்தால் பரபரப்பு! - EGMORE RAILWAY STATION BOMB THREAT

ABOUT THE AUTHOR

...view details