சென்னை:தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25ஆம் கல்வியாண்டுக்கான இளங்கலை படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு, கடந்த மே 6ஆம் தேதி தொடங்கிய விண்ணப்ப பதிவு மாணவர்கள் மற்றும் பெற்றோரின் கோரிக்கையை ஏற்று வரும் 24ஆம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், விண்ணப்பித்த 2 லட்சத்து 11 ஆயிரத்து 10 மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் நேற்று (திங்கட்கிழமை) கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 30ஆம் தேதி வரை மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர், தேசிய மாணவர் படை, பாதுகாப்பு படை வீரர்களுக்கான சிறப்பு ஒதுக்கீட்டு கலந்தாய்வு நடைபெறுகிறது.
மேலும், முதல்கட்ட பொது கலந்தாய்வு ஜூன் 10ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதன் பின்னர், இரண்டாம் கட்ட பொது கலந்தாய்வு ஜூன் 24ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இந்நிலையில், சென்னை மாநிலக் கல்லூரியில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று நடைபெற்றது.
இது குறித்து சென்னை மாநிலக் கல்லூரி முதல்வர் இராமன் கூறும்பொழுது, "கடந்த ஆண்டைக் காட்டிலும் தற்போது அதிகப்படியான விண்ணப்பங்கள் மாநிலக் கல்லூரிக்கு வந்துள்ளன. ஒரு மாணவர் ஒரு பாடத்திற்கு விண்ணப்பம் போடாமல், நான்கு ஐந்து பாடத்திற்கு விண்ணப்பம் போடுவார்கள்.
விண்ணைத் தொட்ட விண்ணப்பங்கள்:அந்த வகையில், கடந்த ஆண்டு 1 லட்சத்து 20 ஆயிரத்து 304 பேர் விண்ணப்பம் அனுப்பியிருந்த நிலையில், இந்த ஆண்டு 1 லட்சத்து 34 ஆயிரத்து 378 விண்ணப்பங்கள் வந்துள்ளன. அதாவது, கடந்த ஆண்டை விட 14 ஆயிரம் விண்ணப்பங்கள் அதிகமாக வந்துள்ளது. மேலும், புதுமைப்பெண் திட்டத்தின் காரணமாக 15 சதவீதம் கூடுதலாக பெண்கள் விண்ணப்பங்களை அனுப்பியுள்ளனர்.
அந்த வகையில், இந்தாண்டு பெண்களின் விண்ணப்பம் மட்டும் 53 ஆயிரத்து 717ஆக உயர்ந்துள்ளது. மேலும், 80 ஆயிரத்து 618 ஆண்களும் மற்றும் 43 மூன்றாம் பாலினத்தவர்கள் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டுகளில் மூன்றாம் பாலினத்தவர் 15 பேர் முதல் 20 பேர் வரை விண்ணப்பித்து வந்த நிலையில், தற்போது அதிகரித்துள்ளது" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "இந்த ஆண்டு அதிகபட்சமாக 15 ஆயிரத்து 341 விண்ணப்பங்கள் பொருளியல் பிரிவுக்கு வந்துள்ளன. வரலாறு துறைக்கு 14 ஆயிரத்து 93 விண்ணப்பங்கள் வந்துள்ளன. வேதியியல் துறைக்கு 14 ஆயிரத்து 80 விண்ணப்பங்கள் வந்துள்ளன. மேலும், அரசியல் அறிவியல் பிரிவிற்கு 10 ஆயிரத்து 323 விண்ணப்பங்களும், கார்ப்பரேட் செகரட்டரிஷிப் பிடிப்புக்கு 7 ஆயிரத்து 938 விண்ணப்பங்களும், வணிகவியல் பாடத்திற்கு 11,056 விண்ணப்பங்களும் வந்துள்ளன.