சென்னை:சென்னை மீனம்பாக்கம் ஜி.எஸ்.டி சாலையில் எப்போதுமே வாகனங்கள் பரபரப்பாக சென்றுகொண்டிருக்கும். அலுவலக நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் பெரும்பாலும் இப்பகுதியில் ஊர்ந்துதான் செல்லும்.
அந்த வகையில் இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நின்று கொண்டிருந்த கார்கள் மீது அதி வேகமாக வந்த மாநகர அரசு பேருந்து ஒன்று திடீரென மோதி விபத்து ஏற்படுத்தி உள்ளது.
இதில் பேருந்து உட்பட விபத்தில் சிக்கிய ஆறு கார்களின் முன் பகுதி மற்றும் பின் பகுதிகள் சேதம் அடைந்துள்ளன. மேலும், பேருந்து மோதியதில் காரில் பயணம் செய்த பெண் ஐடி ஊழியர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு போலீசார் பேருந்து ஓட்டுனர் மற்றும் கார் ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பேருந்து ஓட்டுநர் சாலையில் சிக்னல் போட்டதை கவனிக்காமல் கார்கள் மீது மோதி விட்டதாக கார் ஓட்டுநர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மாநகர அரசு பேருந்து ஓட்டுநர் திடீரென்று ப்ரேக் பிடித்ததால் பேருந்தை கட்டுப்படுத்த முடியாமல் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விபத்து தொடர்பாக அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போக்குவரத்து புலனாய்வு போலீசார் யார் மீது தவறு என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:விஜய் சேதுபதியை உதைப்பவருக்கு ரூ.1,001 பரிசு போஸ்டர்.. அர்ஜுன் சம்பத்திற்கு நீதிமன்றம் ரூ.4,000 அபராதம்