சென்னை:சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டது. அதில், சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையும், விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரை முதலாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டு, தற்போது இவை மக்கள் பயன்பாட்டில் உள்ளது. இதைத் தொடர்ந்து, தற்போது சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ தொலைவில், 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகின்றன.
மாதவரம் - சிறுசேரி வரை (45.4 கி.மீ.) 3-வது வழித்தடத்திலும், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரை (26.1 கி.மீ. ) 4-வது வழித்தடத்திலும், மாதவரம் - சோழிங்கநல்லூர் வரை (44.6 கி.மீ) 5-வது வழித்தடத்திலும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக 50-க்கும் மேற்பட்ட இடங்களில் உயர்மட்டப்பாதை, சுரங்கப்பாதை மற்றும் ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தை விட, 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 5 லட்சத்து 28 ஆயிரத்து 914 பயணிகள் மெட்ரோ ரயிலில் அதிகமாக பயணித்து உள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டில் மட்டும் 9 கோடியே 11 லட்சத்து 2 ஆயிரத்து 957 கோடி பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளனர்.
2015ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை 25 கோடியே 1 லட்சத்து 17 ஆயிரத்து 72 கோடி பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளனர். இந்த நிலையில், 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மொத்தம் 84 லட்சத்து 63 ஆயிரத்து 384 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
அதிகபட்சமாக ஜனவரி 12 அன்று 3 லட்சத்து 64 ஆயிரத்து 521 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மட்டும் க்யூஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி, 37 லட்சத்து 43 ஆயிரத்து 885 பயணிகள் (Online QR - 2,21,716; Static QR - 2,09,136; Paper QR- 25,36,178; Paytm - 3,75,357; Whatsapp - 3,04,232; PhonePe - 97,266), பயண அட்டைகளைப் (Travel Card Ticketing System) பயன்படுத்தி 37 லட்சத்து 92 ஆயிரத்து 912 பயணிகள், டோக்கன்களைப் பயன்படுத்தி 15 ஆயிரத்து 456 பயணிகள், குழு பயணச்சீட்டு (Group Ticket) முறையைப் பயன்படுத்தி 8,792 பயணிகள் மற்றும் சிங்காரச் சென்னை அட்டையைப் (தேசிய பொது பயண அட்டை) பயன்படுத்தி 9,02,336 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ ரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யூஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு, பயண அட்டைகள் (Travel Card), வாட்ஸ்அப் டிக்கெட், Paytm App மற்றும் PhonePe போன்ற அனைத்து வகையாக பயணச்சீட்டுகளுக்கும் 20 சதவீதம் கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (+91 83000 86000) மூலமாக மற்றும் Paytm செயலி மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:தமிழக சுங்கத்துறையில் 39 புதிய அதிகாரிகள் நியமனம்..!