சென்னை: சென்னை பர்மா பஜாரில் தடை செய்யப்பட்ட இ சிகரேட் விற்பனை செய்யப்படுவதாக போலீசருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் பர்மா பஜாரில் உள்ள அனைத்துக் கடைகளிலும் போலீசார் தீவிரச் சோதனை நடத்தினர்.
இதில் பல்வேறு கடைகளில் நடைபெற்ற சோதனையில் 30 லட்சம் மதிப்புள்ள சுமார் 1,300 சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இ-சிகரெட் பாக்கெட்டுகள் விற்பனை செய்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து பேலீசார் தெரிவித்துள்ளதாவது, "கடந்த 2019ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் இ-சிகரெட் விற்பனைக்குத் தடை செய்யப்பட்டது. உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்ந்து தனிப் படை போலீசார் சென்னையில் உள்ள அனைத்துக் கடைகளிலும், சோதனை மேற்கொள்வார்கள். மேலும் இந்தோனேசியாவிலிருந்து இ-சிகரெட்கள் சென்னைக்குக் கடத்தப்பட்டு வருகிறது. இது குறித்த புலன் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என தெரிவித்தனர்.
போலி ஆவணங்கள் தொடர்பான வழக்கில் சினிமா வில்லன் நடிகர் உட்பட இருவர் கைது: சென்னையைச் சேர்ந்த அலோக் அகர்வால். இவர் கடந்த 2022ஆம் ஆண்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்தார்.
அதில், மறைந்த தனது பாட்டனார் பெயரைப் பயன்படுத்தி அவர் உயிருடன் இருப்பது போல் ஆள்மாறாட்டம் செய்து அவருக்குச் சொந்தமான இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை இருவர் மோசடி செய்திருப்பதாகக் குறிப்பிட்டு இருந்தார்.
இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அமீர் ஜான் மற்றும் அவர் நண்பர் ஷாஜகான் ஆகிய இருவர் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர்.
இந்த நிலையில், சென்னையில் தலைமறைவாக இருந்த இருவரின் செல்போன் சிக்னல்களை வைத்து போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கஞ்சா விற்றதில் மூன்று பேர் கைது: தாய்லாந்து நாட்டிலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு உயர்ரகக் கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக சென்னை அண்ணாநகர் போலீசருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்த சண்முகராஜ் (65) என்பவர் உயர் ரக கஞ்சா பொட்டலங்களை சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளுக்குக் கொண்டு சென்று விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்தப் பகுதியில் பதுங்கி இருந்த போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபடும்போது சண்முகராஜை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் சண்முகராஜின் மகன் கார்த்திக் மற்றும் அவரது நண்பர் இப்ராஹிம் இருவரும் தாய்லாந்து நாட்டிலிருந்து உயர் ரக கஞ்சாக்களை விமான மூலம் அனுப்பி வைத்ததும் அதனை வாங்கி சண்முகராஜ் சென்னையில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, சண்முகராஜ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரது கூட்டாளிகள் யாசர் அர்பாத் மற்றும் முகமது ரியாஸ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் கல்லூரி மாணவர்கள், மால், திரையரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்து வந்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
இவர்கள் தாய்லாந்து நாட்டில் குறைந்த விலைக்குக் கஞ்சாவை வாங்கி சென்னையில் அதிக விலைக்கு விற்பனை செய்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், இவர்களிடம் இருந்து 1 கிலோ 600 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட மூவரையும் விசாரணைக்குப் பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தாய்லாந்தில் உள்ள சண்முகராஜின் மகன் கார்த்திக் மற்றும் அவரது நண்பர் இப்ராஹிம் ஆகியோரைக் கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:இனிமேல் பள்ளிகளிலும் ஆதார் பதிவு செய்யலாம்.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி!