தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"தமிழ் வாழ்வியல் அறத்தை கற்றுத் தருகிறது" - அமெரிக்க மொழிபெயர்ப்பாளர் புகழாரம்! - CHENNAI INTERNATIONAL BOOK FAIR

சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா ஜனவரி 16ஆம் தேதி முதல் ஜனவரி 18ஆம் தேதி வரை நடைபெற்ற நிலையில் நேற்று (ஜன.18) நடைபெற்ற நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா
சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 19, 2025, 11:51 AM IST

சென்னை:நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ஜனவரி 16ஆம் தேதி முதல் ஜனவரி 18ஆம் தேதி வரை மூன்று நாட்கள் பன்னாட்டுப் புத்தகத் திருவிழா நடைபெற்றது. இதன் நிறைவு விழாவான நேற்று (ஜன.19) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த நிறைவு விழாவில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் பதிப்பித்த 75 நூல்கள் மற்றும் 2023 - 2024ஆம் ஆண்டுகளுக்கான மொழிபெயர்ப்பு மானியம் வாயிலாக மொழிபெயர்க்கப்பட்ட 30 நூல்களை முதலமைச்சர் வெளியிட்டார்.

மேலும், சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா தூதர் விருது, உலகளாவிய தொலைநோக்கு டிஜிட்டல் புத்தகக் கண்காட்சி சிறப்பு விருது, பண்டைய தமிழ் இலக்கிய மேம்பாட்டு விருது, நவீன தமிழ் இலக்கிய மேம்பாட்டு விருது, கூட்டு வெளியீட்டு கூட்டாண்மை விருது, பன்னாட்டு மானியக் குழுவின் சிறப்பு விருது, புத்தக ஊக்குவிப்பு விருது, உலகளாவிய இலக்கிய ஆதரவிற்கான விருது ஆகிய விருதுகள் விருதாளர்களுக்கு வழங்கப்பட்டு, 2023ஆம் ஆண்டு 24 நாடுகள் பங்குபெற்று 365 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், 2024ஆம் ஆண்டு 40 நாடுகள் பங்குபெற்று 752 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டன.

பதிப்புலக ஆளுமைகள் பங்கேற்பு:

இந்த ஆண்டு 60க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து பதிப்புலக ஆளுமைகள் இப்புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்டுள்ளனர். குறிப்பாக ஆஸ்திரேலியா, பெனின், புரூனே, பல்கேரியா, சிலி, சைப்ரஸ், எஸ்தோனியா, எத்தியோப்பியா, கானா, ஐவரி கோஸ்ட், ஜப்பான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், லக்ஸம்பர்க், மடகாஸ்கர், மொரிசியஸ், மெக்சிகோ, மங்கோலியா, மொராக்கோ, மொசாம்பிக், நேபாளம், நைஜீரியா, நார்வே, ROC (தைவான்), ருமேனியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, இலங்கை, டோகோ, உக்ரைன், அமெரிக்க ஐக்கிய நாடுகள் (USA), உஸ்பெகிஸ்தான், ஜிம்பாப்வே ஆகிய 34 நாடுகள் முதல் முறையாகப் பங்கேற்றுள்ளன.

மொழிபெயர்ப்பு, கருத்து பரிமாற்றம்:

உலகெங்கும் நம் இலக்கியங்களை எடுத்துச் சென்று, தமிழ் மொழியின் சிறப்பினை பறைசாற்றும் வகையில், தமிழ்நாடு மொழிபெயர்ப்பு மானியமாக ஆண்டுதோறும் ரூ.3 கோடி தமிழ்நாடு அரசால் வழங்கப்படுகிறது. இதன்மூலம், கடந்த இரண்டாண்டுகளில், 166 தமிழ் நூல்கள், 32 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்படுவதற்கு மானியம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு புகழ்பெற்ற பன்னாட்டுப் பதிப்பகங்களான ஆக்ஸ்போர்டு யூனிவர்சிட்டி பிரஸ், பென்குயின் ரேண்டம் ஹவுஸ், ஹார்ப்பர் ஹாலின்ஸ், ஹெஷட் (Hachette), ரௌட்லட்ஜ் (Routledge), ப்ளூம்ஸ்பெர்ரி (Bloomsbury) போன்றவற்றுடன் இணைந்து பல்வேறு கூட்டு வெளியீடுகளை (Co-publications) குறிப்பாக தமிழ் இலக்கியங்களைத் தமிழ்நாட்டு வரலாற்றை தமிழர் பண்பாட்டை ஆங்கில மொழி பெயர்ப்புகள் வாயிலாக உலகெங்கும் கொண்டு சேர்க்கும் பணியினை சிறப்பாகச் செய்து வருகிறது.

இதையும் படிங்க:"தமிழகர்களிடம் ஆளுநர் மன்னிப்பு கேட்க வேண்டும்" - சட்டத்துறை மாநாட்டில் தீர்மானம்!

அதன் தொடர்ச்சியாக, நேற்று சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழாவின் நிறைவு நடைபெற்றது. இதில், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் பதிப்பித்த 75 நூல்கள் மற்றும் 2023 - 2024ஆம் ஆண்டுகளுக்கான மொழிபெயர்ப்பு மானியம் வாயிலாக மொழிபெயர்க்கப்பட்ட 30 நூல்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இந்த ஆண்டு நடைபெற்ற சென்னை பன்னாட்டு புத்தகக் கண்காட்சியில் 1125 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.

அதில் தமிழ்மொழியிலிருந்து அயலக மொழிகளுக்கு 1,005 ஒப்பந்தங்களும், அயலகமொழிகளிலிருந்து தமிழ் மொழிக்கு 120 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. குறிப்பாக, அரபிக் மொழிக்கு 33 ஒப்பந்தங்களும், பிரெஞ்ச் மொழிக்கு 32 ஒப்பந்தங்களும், மலாய் மொழிக்கு 28 ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளன.

மொழிபெயர்ப்பாளர் தாமஸ் ஹிடோஷி புருக்ஷிமா:

இதுகுறித்து ஈடிவி பாரத் தமிழ் ஊடகத்திற்கு பிரத்தியேக பேட்டியளித்த அமெரிக்காவைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர் தாமஸ் ஹிடோஷி புருக்ஷிமா, “எனது தமிழ் ஆசிரியர் எனக்கு தமிழ் மீது ஆர்வம் வருவதற்கு காரணமாக இருந்தார். முதலில் பேச்சு மற்றும் படிப்பதற்கான தமிழ் மட்டுமே கற்றுக் கொண்டேன். பிறகு தமிழை எழுத கற்றுக்கொண்டேன். தமிழ்ப் பாடல்களை தொடக்க வகுப்பிலிருந்து படிக்கத் தொடங்கினேன்.

ஆங்கிலத்தில் A for Apple என்றும் B for Ball என வரும் ஆனால் தமிழில் அவ்வையரின் ஆத்திச்சூடியில் அறம் செய்ய விரும்பு, ஆறுவது சினம் என்று வரும் அப்படி சொல்லிக் கொடுக்கும் பொழுதே எப்படி வாழ வேண்டும், எப்படி நினைக்க வேண்டும், மக்களுடன் எப்படிப் பழக வேண்டும் என வழிகாட்டி வருகின்றனர். தமிழ் மொழியின் கலாச்சாரம் எங்கள் நாட்டில் உள்ள மக்களிடம் கொண்டு சேர்க்கும் போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.

எழுத்தாளர் அகிலா ராம் நாராயணன்:

இதையடுத்து பேசிய எழுத்தாளரும், பேராசிரியருமான அகிலா ராம் நாராயணன், “சர்வதேச புத்தகக் கண்காட்சியை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. உலகம் முழுவதும் உள்ள எழுத்தாளர்களை ஒரே இடத்தில் பார்க்கலாம். இப்போது உலகம் இருக்கும் சூழ்நிலையில் வாழ்க்கைக்குக் கவிதை, நாவல், பாடல் என அனைத்துமே உதவியாக இருக்கிறது. தற்போது உள்ள உலகத்தில் இலக்கியம் நம்மை நல்ல சூழ்நிலைக்கு அழைத்துச் செல்லும்.

ஒவ்வொரு நாட்டிற்கும் அவர்களின் மொழி உயர்ந்ததாக இருக்கும். மொழிபெயர்ப்பு மூலமாக ஒரு பண்பாடு மற்றவர்களுக்கு செல்கிறது. இந்த புத்தகக் கண்காட்சி முக்கியமான முயற்சியாக இருக்கிறது. வரும் காலங்களில் பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி அதிகமாக முன்னெடுக்க வேண்டி உள்ளது. மாணவர்கள் ஆறு நொடிக்கு மேல் ஒருவர் பேசுவதைக் கவனிப்பதில்லை. அவர்களை எப்படி கவனிக்க வேண்டும் என நாம் சொல்லிக்கொடுக்க வேண்டும்” என்றார்.

எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன்:

தொடர்ந்து பேசிய எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன், “வேற்றுமையில் ஒற்றுமையை மையமாக வைத்து பல்வேறு போக்குகளைத் தமிழுக்கு கொண்டு வர வேண்டும் என்பது தான் அரசின் நோக்கம். மூன்றாவது ஆண்டாக புத்தகக் கண்காட்சியை அரசு நடத்தி வருகிறது. புத்தகத்தின் காட்சியின் நோக்கம் உலகளாவிய கலாச்சாரம், பன்முகத்தன்மையை தமிழுக்கு கொண்டு வருவது.

இதில், தமிழ் படிப்புகளை பிற மொழிக்கு கொண்டு செல்வதற்கான ஒப்பந்தங்களும், பிற மொழிகளில் உள்ள புத்தகங்கள் தமிழுக்கு கொண்டு வருவதற்கான ஒப்பந்தங்களும் போடப்பட்டுள்ளது. இது வெளிநாட்டு பதிப்பாளர்கள், எழுத்தாளர்களுக்கும் உள்நாட்டுப் பதிப்பாளர் மற்றும் எழுத்தாளர்களுக்கும் இடையே ஒரு நட்பு உருவாகக் காரணமாக உள்ளது. எதிர்காலத்தில் இலக்கியப் பரிவர்த்தனை செய்வதற்கு இது வாய்ப்பாக அமையும். இந்த கண்காட்சி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details