சென்னை:விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படக்கூடிய காயங்களின் தன்மையை கண்டறிய சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கையடக்க பாயிண்ட் ஆஃப் கேர் அல்ட்ராசவுண்ட் (POCUS) என்ற ஸ்கேனரை உருவாக்கியுள்ளனர்.
பேராசிரியர் அருண் திட்டாய் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) மேலும், இந்த தொழில்நுட்பங்களுக்கு காப்புரிமைகள் ஏற்கனவே பெற்றுள்ளதுடன், உற்பத்திக்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சென்னை ஐஐடியின் உயர்தர விளையாட்டு அறிவியல் மற்றும் பகுப்பாய்வுக்கான சிறப்பு மையத்தின் (Center of Excellence in Sports Science and Analytics - CESSA) இந்த ஆராய்ச்சியின் மூலம் ஆடுகளத்தில் விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும் காயங்களை கண்டறியவும், அவர்களை தொடர்ந்து விளையாட அனுமதிக்கலாமா என்பதை அறிவதற்காக காயத்தின் அளவை உடனடியாக மதிப்பீடு செய்யவும் முடியும்.
இதுகுறித்து சென்னை ஐஐடி அப்ளைடு மெக்கானிக்ஸ் மற்றும் உயிரிமருத்துவப் பொறியியல் துறை பேராசிரியர் அருண் திட்டாய் கூறுகையில், "முன்னணி விளையாட்டு வீர்ர்கள் காயத்தின் மேலாண்மைக்கும், மறுவாழ்வுக்கும் வழக்கமான பயிற்சியை மேற்கொள்ளும் வகையில், வளாகத்திற்குள் ஒரு சாதனம் அவசியம் என்பதையும் கவனித்தோம்.
தசைக்கூட்டுக்கான மதிப்பீட்டை ஆடுகளத்திலேயே விரைந்து மேற்கொள்வதன் மூலம், விளையாட்டு வீரர்களை உடனடியாக கவனிக்கவும், அவர்கள் காயங்களில் இருந்து மீண்டுவர கவனம் செலுத்தவும் முடியும். எங்களது இந்த கண்டுபிடிப்பு அல்ட்ராசவுண்ட் தொழில்நுட்பத்தில் அண்மைக்கால வளர்ச்சியை மருத்துவமனை அமைப்புகளைத் தாண்டி விளையாட்டு மருத்துவத்தில் பயன்படுத்துவதை நோக்கமாக கொண்டிருக்கிறது.
வணிகரீதியில் பயன்படுத்த ஏதுவாக எம்எஸ்கே இமேஜிங்கிற்கு போகஸை (POCUS) மதிப்பீடு செய்வதற்கான அனைத்து விதமான ஆய்வுகளையும் தற்போது நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். விளையாட்டுத் தொழில்நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கவும், விளையாட்டு வீரர்களின் செயல்திறனை மேம்படுத்தவும், பொதுவான உடற்திறன் - உடல்நலம் ஆகியவற்றை நுகர்வோருக்கு வழங்கும் வகையிலும் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குவதற்கான உலகளாவிய தளமாகவே செஸ்ஸா நிறுவப்பட்டது.
ஊடக தளங்கள் மூலமாக தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளை உருவாக்கி வழங்குவதுடன், இதற்கான ஈடுபாட்டை அதிகரிக்கும் வகையில் விளையாட்டு கூட்டமைப்புகள், விளையாட்டு அமைப்புகளுடன் இணைந்து செயல்படும்.
விளையாட்டு மருத்துவம் என்பது, ஆடுகளத்தில் விளையாடும்போது ஏற்படும் வீரர்களின் காயங்களைக் கண்டறிந்து சிகிச்சையளிப்பதில் நுட்பமாக கவனம் செலுத்தும் நிபுணத்துவம் ஆகும். பொதுவாக விளையாட்டு வீரர் ஒருவர் நோயாளியாக வரும்போது பெரும்பாலான இமேஜிங் ஆய்வுகள் மருத்துவமனைகளில் நடைமுறைப்படுத்தப் படுகின்றன.
நோயாளிகளாக வரக்கூடிய விளையாட்டு வீரர்கள் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் அண்மைக்கால தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும்போது, மருத்துவ சாதனங்கள், தொழில்நுட்பங்களை அணுகுவதில் மிகப்பெரிய இடைவெளி இருந்து வரும் சூழலில், வழக்கமான பயிற்சிகளின்போது இந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தலாம்.
இதுபோன்ற அணுகுமுறையின் மூலம் விளையாட்டு வீரர்களை பராமரிப்பதில் முன்னுதாரணமாக திகழக்கூடிய வகையில் மாற்றத்தை ஏற்படுத்துவதுடன், சான்று அடிப்படையிலான பயிற்சிகளை மேற்கொள்ளவும், காயம் ஏற்படாமல் தடுக்கவும் உதவும்" என்று பேராசிரியர் அருண் திட்டாய் தெரிவித்தார்.