சென்னை:கடந்த 2017ஆம் – 2018ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(TNPSC) நடத்திய குரூப் 2 ஏ தேர்வில் கலந்து கொண்ட மூன்றாம் பாலின விண்ணப்பதாரர் அனுஸ்ரீ. இவர் சான்றிதழ் சரிபார்ப்புக்குத் தன்னை அனுமதிக்கும்படி, உத்தரவிடக் கோரி 2022ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பவானி சுப்பராயன். கடந்த 2014ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற வெளியிட்ட தீர்ப்பைச் சுட்டிக்காட்டி, மூன்றாம் பாலினத்தவர்கள் சமூகம், கல்வி ரீதியாகப் பின்தங்கியவர்கள் எனக் கருதி, கல்வி, வேலைவாய்ப்பில் அனைத்து விதமான இட ஒதுக்கீட்டுச் சலுகைகளையும் வழங்க வேண்டும் எனக் கூறிய போதும் மத்திய அரசோ, மாநில அரசோ இதுவரை இது சம்பந்தமான விதிகளை வகுக்கவில்லை எனக் கூறினார்.
மேலும் மூன்றாம் பாலினத்தவர்களைக் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்குப் பட்டியலில் ஆண்களாகவோ, பெண்களாகவோ கருதாமல் தனி பிரிவினராகக் கருத வேண்டும் எனத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மூன்றாம் பாலினத்தவர்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பாக பிரத்யேக விதிகளை வகுக்க வேண்டும் எனவும், எதிர்காலத்தில் மூன்றாம் பாலினத்தவர்களை ஆண்கள், பெண்கள் பிரிவில் சேர்க்க கூடாது எனவும் அறிவுறுத்திய நீதிபதி, 2022ம் ஆண்டு நடந்த குரூப் 2 தேர்வில் மனுதாரரின் சான்றிதழைச் சரிபார்க்க அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
தனது தீர்ப்பில் நீதிபதி பவானி சுப்பராயன், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி மூன்றாம் பாலினத்தவர்களுக்கு அப்போதே சிறப்புப் பிரிவினராகக் கருதி விதிகளை வகுக்குத்திருந்தால், மனுதாரர் தனது வாழ்க்கையின் வழியைக் கண்டிருப்பார். ஆனால் உரிய வாய்ப்புகளை வழங்க மறுத்ததால், கல்வித் தகுதி பெற்ற மூன்றாம் பாலினத்தவர்கள், தற்போது சமூகத்தில் உள்ள அசாதாரணமான வாழ்க்கை நடைக்குத் தள்ளப்படுவது குறித்து அச்சம் தெரிவித்துள்ளார். இதனால் தமிழக அரசு மூன்றாம் பாலினத்தவர்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பில் போதுமான வாய்ப்பை வழங்கி, தரமான வாழ்க்கையை வாழ வைக்க வேண்டும். இது அரசின் கடமை எனவும், அதனால் அவர்களை சிறப்புப் பிரிவினராகக் கருத வேண்டும் எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க:தனியார் திருமண மண்டபம் மீதான விதிமீறல் வழக்கு: மதுரை மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!