சென்னை:அண்ணா பல்கலைக்கழக மாணவிகளின் பாதுகாப்புக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? வழக்கு குறித்த விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிபிஐ விசாரணை:அண்ணா பல்கலைக்கழக மாணவி டிச.23ம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பெண் வழக்கறிஞர் வரலட்சுமி சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பிய கடிதத்தில், "இந்த சம்பவம் தொடர்பான காவல்துறையினரின் விசாரணையில் குறைபாடுகள் உள்ளதாகவும், சட்டப்படி பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளிப்படுத்தக் கூடாது என்ற போதிலும், வழக்கின் முதல் தகவல் அறிக்கை காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது என்பதால் இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்,"என கூறியிருந்தார்.
அந்த கடிதத்தின் அடிப்படையில் தாமாக முனவந்து வழக்கை விசாரிக்க முடியாது எனவும், தலைமை நீதிபதியின் ஒப்புதல் பெற வேண்டும் எனவும் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் வி.லக்ஷ்மி நாராயணன் அடங்கிய அமர்வு தெரிவித்தது. மேலும், வழக்காக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுக்கப்படும் எனவும் வழக்கறிஞர்களுக்கு அறிவுறுத்தினர்.
இதையடுத்து, வழக்கறிஞர்கள் வரலட்சுமி, மோகன்தாஸ் ஆகியோர் "மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். உயர்நீதிமன்ற பெண் நீதிபதி தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரணையை கண்காணிக்க வேண்டும்,"என குறிப்பிட்டிருந்தனர்.
பல புகார்கள் உள்ளன:இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் வி.லக்ஷ்மி நாராயணன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஐரான வழக்கறிஞர் ஜெயபிரகாஷ் நாராயண், "முதலில் ஞானசேகரை கைது செய்து பின்னர் விடுவித்த காவல்துறையினர் அழுத்தம் காரணமாக மீண்டும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஞானசேகரன் செல்வாக்கான நபராக உள்ளார். பாலியல் வன்கொடுமை தொடர்பாக ஞானசேகர் மீது இந்த வழக்கு மட்டும் தான் உள்ளது என காவல்துறை ஆணையர் கூறுகிறார். ஆனால் அவர் மீது பல புகார்கள் உள்ளன. அது குறித்து விசாரிக்க வேண்டும்,"என தெரிவித்தார்.