சென்னை: பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களுக்கு முடிவெட்ட மறுத்ததாக பதியப்பட்ட வழக்கில், சலூன் கடைக்காரர்களுக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம், அரூரை அடுத்த கீரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த யோகேஷ்வரன் மற்றும் அவரது தந்தை கருப்பன் ஆகிய இருவரும் சலூன் கடை நடத்தி வருகின்றனர். இவர்களின் கடைக்கு கெளாப்பாறை அம்பேத்கர் நகரை சேர்ந்த தலித் இளைஞர் சஞ்சய், முடிதிருத்தம் செய்யச் சென்றுள்ளார்.
அப்போது, சஞ்சயின் ஊரை விசாரித்த யோகேஷ்வரன், கெளாப்பாறையைச் சேர்ந்தவர்களுக்கு முடி வெட்ட முடியாது என்று தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதுசம்பந்தமாக சஞ்சய், அரூர் காவல் நிலையத்தில் யோகேஷ்வரன் மற்றும் கருப்பன் மீது புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், இருவரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இருவரும் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதி எம்.தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அனைத்து தரப்பினருக்கும் முடிவெட்டி வருவதாகவும், புகார்தாரர் சஞ்சய்க்கு முடிவெட்ட மறுக்கவில்லை என்றும், காத்திருக்கத் தான் சொன்னதாகவும் மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்க நீதிபதி, இருவருக்கும் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:டிஎன்பிஎஸ்சி தொடர்பான வழக்கு: மூன்றாம் பாலினத்தவர்கள் சிறப்பு பிரிவினராக கருத உயர் நீதிமன்றம் உத்தரவு!