சென்னை:சென்னையில் நேற்று 13 தனியார் பள்ளிகளுக்கு மெயில் மூலமாக வந்த வெடிகுண்டு மிரட்டல் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, காவல்துறை சார்பில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் வதந்தி எனவும், இதனால் பொதுமக்கள் யாரும் பதற்றம் அடைய வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் 9 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், பள்ளிகளுக்கு இமெயில் அனுப்பிய நபர் யார், எங்கிருந்து மெயில் அனுப்பப்பட்டது, அவருடைய ஐபி முகவரி என்ன என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இமெயில் ஐடி வெளிநாட்டைச் சேர்ந்த நிறுவனம் மெயில் மூலம் வந்துள்ளதை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
தொடர்ந்து போலீசார் ஆய்வு செய்ததில், அந்த மெயில் சுவிட்சர்லாந்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் மெயில் நிறுவனத்தில் இருந்து அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சுட்சர்லாந்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் அந்த மெயில் நிறுவனத்திற்கு, சென்னை காவல்துறை சார்பில் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அந்த நபர் இந்த இமெயில் ஐடியை தொடங்குவதற்கு எந்த எண்களைப் பயன்படுத்தினார் என்பது குறித்த விவரங்களை கேட்டு உள்ளனர். மேலும், அந்த நிறுவனத்தில் இருந்து பதில் கிடைத்தவுடன், அந்த மர்ம நபர் எந்த இடத்தில் இருந்து இந்த மெயிலை அனுப்பினார் எனக் கண்டறிந்து, அவரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரம் காட்டி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:நெல்லை - திருச்செந்தூர் பயணிகள் ரயில் 9 நாட்கள் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு!