சென்னை:சென்னை நெம்மேலி பகுதியில் உள்ள கிரேட் சால்ட் லேக்-இல் பூவுலகின் நண்பர்கள் சூழலியல் அமைப்பின் சார்பாக ’பறவைகள் அவதானிப்பு’ (Birds Watching) நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அவர்கள் அனைவருக்கும் பறவைகள் அவதானிப்பு முறை, பறவைகள் குறித்த விழிப்புணர்வு ஆகியவை கற்றுக் கொடுக்கப்பட்டது. இந்த இடத்தில் 24 வகைகள் பறவைகளும், 150-க்கும் மேற்பட்ட பறவைகள் காணப்பட்டன.
பறவைகள் அவதானிப்பு என்றால் என்ன?
பறவைகள் அவதானிப்பு என்பது பறவைகளின் வாழ்விடத்திற்குச் சென்று அவற்றைக் கவனிப்பதாகும். அதன் குணாதிசயங்களைக் குறிப்பு எடுத்தல் மற்றும் அதன் எண்ணிக்கையைக் கணக்கிடுதல் போன்றவை ’பறவைகள் அவதானிப்பில்’ அடங்கும். சென்னை போன்ற பெரு நகரங்களில் பறவைகள் வந்து தங்களது வாழ்விடங்களைக் கண்டறிந்து அதில் வாழ்வது என்பது சவாலான செயலாக உள்ளது.
இருப்பினும், சென்னையின் சுற்றுவட்டார இடங்களான கோவளம், சோழிங்கநல்லூர், பள்ளிக்கரணை சதுப்புநிலம், சிறுதாவூர் பகுதிகளில் பறவைகள் வாழ்வதற்குச் சற்று ஏதுவான சூழல் உள்ளது. இதுகுறித்து நமது ஈடிவி பாரத் தமிழ் ஊடகத்திற்குப் பறவைகள் அவதானிப்பாளர் சக்திவேல் பேட்டி அளித்தார்.
சென்னையில் BIRD WATCHING:
அதில் அவர் கூறியதாவது, “சென்னை கிரேட் சால்ட் லேக் என்ற பெயர் அமெரிக்காவில் இருக்கும் சால்ட் லேக் கின் பெயரைத் தான் வைத்திருக்கின்றனர். கடந்த ஆண்டிலிருந்து பறவைகள் இங்கு வருவது குறைந்துள்ளது. அதன் முக்கிய காரணம் காலநிலை மாற்றமாகும். இந்த காலநிலை மாற்றம் பறவைகளின் இடம் பெயரும் முறையை மாற்றுகின்றன. அடுக்கு மாடி குடியிருப்புகள் போன்ற காரணங்களாலும் பாதிப்புகள் ஏற்படுகின்றன.
இதுவரை இப்பகுதியில் சுமார் 200 பறவைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் இந்த ஆண்டு மட்டுமே 103-இல் இருந்து 113 பறவைகளின் வருகை பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த இடத்தில் சங்கு வளை நாரை (Painted stork), தட்டை வாயன் (Northern shoveler), ஊசி வாழ் வாத்து (Northern Pink Tail), நெடுங்கால் உள்ளான் (black winged stilt) ஆகிய பறவைகள் அதிகமாக இங்கு வருகின்றன. பல வருடங்களாக வருகைப் பதிவு செய்யப்படாமல் இருந்த வெண்கழுத்து நாரை (Woolly-necked stork) என்னும் பறவையின் வருகை இந்த வருடம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பறவைகள் அவதானிப்பில் ஈடுபட்டவர்கள் பேட்டி (ETV Bharat Tamil Nadu) பறவைகள் இந்த இடத்திற்கு வர காரணம்:
முட்டுக்காட்டில் இருந்து வரக்கூடிய தண்ணீரும், பக்கிங்காம் கால்வாயிலிருந்து வரக் கூடிய தண்ணீரும் இணையக் கூடிய பகுதி இது. இதன் பரப்பளவு 5000 ஏக்கருக்கு மேலாகும். பறவைகள் இந்த இடத்தை தேர்ந்தெடுத்து வருவதற்கான காரணம், இந்த பகுதியில் இருக்கக் கூடிய உப்புத்தன்மை. அதிலும் பக்கிங்காம் கால்வாயில் இருந்து வரும் தண்ணீர் இங்குக் கலப்பதால் அதிகளவிலான பறவைகள் வருகின்றன.
இதையும் படிங்க:அழியும் தருவாயில் உள்ள ‘அமுர் ஃபால்கன்’ பறவை: சாட்டிலைட் பொருத்தி கண்காணிப்பு
- முதலில் நமக்கு அருகில் இருக்கும் பறவைகளைப் பார்க்க வேண்டும்.
- அதன் தோற்றம், சத்தத்தை வைத்து 'EBIRDS' என்ற செயலியைப் பயன்படுத்தி பறவை பெயர் என்ன? பறவை எங்கிருந்து? எங்கே வந்துள்ளது? போன்ற தகவல்களை அறிந்துக் கொள்ளலாம்.
- இதைச் செய்வதற்கு முதலில் பொறுமை மிக முக்கியம். சில பறவைகளை நம்மால் கண்ணால் பார்க்க முடியும், சில பறவைகளை தொலைநோக்கி கருவி பயன்படுத்திப் பார்க்க முடியும். ஆகையால், நாம் பளிச் என்று இருக்கக் கூடிய ஆடையை அணியாமல் இயற்கையோடு இயைந்து இருப்பது போன்ற நிறங்களில் உடை உடுத்துவது பறவைகளிடமிருந்து நம்மைத் தனித்துக் காட்டாது.
- பறவைகளைப் பார்த்து அவற்றின் நிறம், உடலமைப்பு, அதன் உயரம், அலகின் அமைப்பு மற்றும் அலகின் நீளம் ஆகியவை குறிப்பு நாம் குறிப்பு எழுதி வைத்துக் கொள்ள வேண்டும். பின் அது குறித்து அறிந்து கொள்ள உதவிக் கரமாக இருக்கும்.
- அதன் பின்னர் அது என்ன பறவை என்று நாம் தெரிந்துகொள்ளலாம்" என்றார்.
இதன் பயன்கள்:
பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சூழலியல் செயற்பாட்டாளர் ஜியோ டாமின், “இந்த பறவைகள் அவதானிப்பு செய்வதன் மூலம் நமக்கு பொறுமையாக இருப்பதற்கான பயிற்சி கிடைக்கும். பறவைகள் எவ்வளவு முக்கியம் என்பதைத் தெரிந்துகொள்ளலாம். பறவைகள் இல்லையென்றால் எதுவுமே இல்லை. பறவைகள் இல்லையென்றால் பூச்சிகள் அதிகரித்துவிடும்.
அதில் கரிச்சான் பறவைகள் என்கிற இரட்டை வால் குருவி நாம் கேள்விப்பட்டிருப்போம். அந்த குருவி ஒரு மணி நேரத்திற்கு 2000 - 2500 பூச்சிகளைச் சாப்பிடக் கூடியது. பூச்சிகளைக் கட்டுப்பாட்டில் வைப்பதற்கும், விவசாயத்தைப் பாதுகாப்பதற்கும், பறவைகள் முக்கியமானது என்பதை நாம் உணர முடியும்,” என்றார்.