சென்னை: கடந்த ஜூலை 30ஆம் தேதி, கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. வயநாடு நிலச்சரிவில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரும் பாதிப்பை ஏற்படுத்திய இந்த நிலச்சரிவில் மீட்புக் குழுவினர், தன்னார்வாளர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக தங்களால் இயன்ற உதவிகளை செய்துவருகின்றனர்.
வயநாட்டில் தற்போது வரை மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. வயநாடு பழைய நிலைக்கு வர உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களின் ஆதரவு வந்துகொண்டே இருக்கிறது. சாதாரண குடிமகன் முதல் பிரபலங்கள் வரை தங்களால் இயன்ற நிதி உதவிகளை செய்து வருகின்றனர்.
இரண்டு நாள் வருமானம்: அந்த வகையில், சென்னை பெரம்பூரைச் சேர்ந்த பெண் ஆட்டோ ஓட்டுநரான ராஜி என்பவர் தன்னால் முடிந்த நிதி உதவியை வயநாடு மக்களுக்கு செய்து வருகிறார். வாரத்தில் மிகவும் அதிகமாக சவாரியை தரும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமைகளில் வரும் ஆட்டோ வருமானத்தை நேரடியாக கேரளா முதல்வர் நிவாரண நிதிக்கு செலுத்தி வருகிறார்.
இதற்காக தனது ஆட்டோவில் விழிப்புணர்வு பதாகைகள், கேரளா முதல்வர் நிவாரண நிதிக்கு நேரடியாக பணம் செலுத்தும் வகையிலான UPI வசதியை அவர் ஏற்படுத்தியுள்ளார். ஆன்லைன் பரிவர்த்தனை வசதி இல்லாதவர் வசதிக்காக உண்டியலையும் ஆட்டோவில் வைத்துள்ளார். முதற்கட்டமாக, வயநாடு மக்களுக்கு நிதி அளிக்கும் விழிப்புணர்வை சின்னத்திரை பிரபலம் பாலாவை வைத்து ராஜி துவக்கியுள்ளார்.
இதுகுறித்து ஆட்டோ ஓட்டுநர் ராஜி ஈடிவி பாரத்திடம் கூறுகையில், "வாடிக்கையாளர்கள் ஆட்டோவில் ஏறியவுடன் ஆன்லைனில் பணம் அனுப்புமாறும், கேரள நிவாரண நிதிக்காக அந்த பணத்தை அளிப்பதாகவும் தெரிவிப்பேன். அனைத்து வாடிக்கையாளர்களும் குறிப்பிட்ட சவாரிக்கான தொகையை விட கூடுதலாகவே பணத்தை செலுத்துகிறார்கள். இதுபோக வாடிக்கையாளர்கள் சிலர் அவர்களால் முடிந்த உதவிகளை தனிப்பட்ட முறையிலும் செய்கிறார்கள்.