சென்னை:ஆவடி அடுத்த மிட்டனமல்லி காந்தி மெயின் ரோடு இரண்டாவது குறுக்குத் தெருவைச் சேர்ந்த கேரள மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் சித்தா மருத்துவர் சிவன் நாயர். இவர் வீட்டிலேயே சித்தா மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி பிரசன்னா குமாரி, கணவருக்கு உதவியாக இருந்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் சிகிச்சை பார்ப்பதற்காக வந்த மர்ம நபர்கள், சிவன் நாயர் மற்றும் அவரது மனைவி பிரசன்னா குமாரி ஆகியோரை கொலை செய்துவிட்டு தப்பியோடி உள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த முத்தாபுதுபேட்டை போலீசார், சம்பவம் நடைபெற்ற மருத்துவர் வீட்டில் சோதனை செய்தனர்.
சிக்கிய செல்போன்:அப்போது சம்பவ இடத்தில் செல்போன் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த செல்போன் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மகேஷ் என்பவருக்குச் சொந்தமானது என்றும், இவர் வளசரவாக்கத்தில் தங்கி ஹார்டுவேர் கடையில் வேலை பார்த்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும், வளசரவாக்கம் பகுதியில் வேலைக்கு சேர்வதற்கு முன்னர், முத்தாபுதுபேட்டையில் சில வருடம் வேலை செய்து வந்துள்ளார். இந்த காலகட்டத்தில் சிவன் நாயர் வீடு புதுப்பித்தல் போது மகேஷ் அறிமுகமாகி உள்ளார். பின்னர், சித்த மருத்துவர் சிவன் நாயரிடம் உடல் வலிக்கு மகேஷ் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
உடல் வலிக்கு சிகிச்சை:உடல் வலிக்கு சிவன் நாயர் மற்றும் அவரது மனைவி பிரசன்னா குமாரி 'வர்மக்கலை' மூலமாக மகேஷுக்கு சிகிச்சை அளித்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் , நாளடைவில் மகேஸின் நடவடிக்கை பிடிக்காத பிரசன்னா குமாரி, இங்கு வருவதை தவிர்க்கும்படி கூறி வந்துள்ளார்.