சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கு.செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சென்னை அசோக் நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நிகழ்ந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. மாணவிகளுக்கு தன்னம்பிக்கையூட்டும் நிகழ்ச்சி நடத்தப்பட்டதில் ஒரு பேச்சாளர் மூடநம்பிக்கையை வளர்க்கும் வகையில் பகுத்தறிவுக்கு விரோதமாக கருத்துகளை கூறியிருக்கிறார்.
கல்வியறிவை வளர்க்க வேண்டிய பள்ளிகளில் மூட நம்பிக்கையை வளர்ப்பவர்கள் சமூக அக்கறையில்லாதவர்களாகவே கருதப்படுவார்கள். அங்கே உரையாற்றிய பேச்சாளர் குறிப்பிட்ட மத உணர்வை தூண்டுகிற சனாதன கருத்துகளை பகிரங்கமாக மாணவிகள் மத்தியில் கூறியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்த தலைமையாசிரியை பணியிடமாற்றம் செய்யப்பட்டிருப்பதை வரவேற்கிறேன்.
தமிழகத்தில் சமீபகாலமாக வகுப்புவாத சக்திகள் கடவுளின் பெயராலும், மதத்தின் பெயராலும் ஊடுருவ முயற்சிப்பதை தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர் பிறந்த மண்ணில் அனுமதிக்க முடியாது. அனைத்து மதங்களுக்கும் பொதுவான இடமாகவே பள்ளிகள் இருக்க வேண்டும். போன ஜென்மத்தில் எதை செய்கிறீர்களோ, அதனுடைய பலனைத் தான் இந்த ஜென்மத்தில் நீங்கள் அனுபவிக்க வேண்டுமென்று அறிவியலுக்கு விரோதமாக அந்த குறிப்பிட்ட பேச்சாளர் மாணவிகளிடையே பேசியிருப்பதை எவராலும் சகித்துக் கொள்ள முடியாது. எல்லாவற்றையும் பிறப்பின் அடிப்படையில் தான் முடிவு செய்யப்படும் என்று கூறியிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.
எனவே, தமிழக கல்வித்துறையில் வகுப்புவாத மற்றும் பகுத்தறிவுக்கு விரோதமான கருத்துகள் கூறுவதை தடுக்கிற வகையில் உரிய நடவடிக்கையை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் உடனடியாக எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். மாணவ - மாணவிகளிடையே இத்தகைய நச்சு கருத்துகள் கூறுவது அனுமதிக்கப்பட்டால் மிகப்பெரிய பேராபத்தை தமிழகம் எதிர்நோக்க நேரிடும் என எச்சரிக்க விரும்புகிறேன்' என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
'மூடநம்பிக்கையுடனும், ஆபாசத்துடனும், மாற்றுத்திறனாளி ஆசிரியரை மிரட்டிய மகாவிஷ்ணுவை கைது செய்ய வேண்டும் எண்று வலியுறுத்தியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அரசு பள்ளிகளில் ஆட்சேபகரமாகவும், அறிவியலுக்கும், கல்விக்கும் சம்பந்தமில்லாத மூடக்கருத்துக்களை பரப்பும் வகையிலான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டிருப்பதற்கு வலுவான எதிர்ப்பும் கண்டனங்களும் எழுந்துள்ளன. ஆன்மீகம், பக்தி என்ற பெயரால் அறிவியல் கண்ணோட்டங்களை பலவீனப்படுத்தி, பள்ளி மாணவ மாணவியரிடையே பழமைவாத மற்றும் மூடக்கருத்தியலை கொண்டு செல்லும் வகையில் இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது' என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், 'அரசுப் பள்ளிகள் மூடநம்பிக்கை கருத்துக்களுக்கான பரப்புரை மேடையாகவும், போலி என்சிசி பயிற்சி என்ற பெயரில் சமூக மோதல்களை உருவாக்கும் அமைப்புகளின் பயிற்சி களமாகவும் பயன்படுத்தி, இளைய தலைமுறையின் சிந்தனையில் வன்மம் வளர்ப்பதை பள்ளிக் கல்வித்துறை முற்றிலுமாக தடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது' என்று முத்தரசன் வலியுறுத்தி உள்ளார்.
'கல்விக் கூடங்களில் ஆன்மிக மூடநம்பிக்கைப் பிரச்சாரமா? என்று கேள்வி எழுப்பியுள்ள திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மூடநம்பிக்கைப் பிரச்சாரம் செய்ய அனுமதித்தவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்த கல்வி அமைச்சருக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் கல்விக் கூடத்தில் மூடநம்பிக்கைப் பிரச்சாரம் செய்ய அனுமதித்தது அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது. சட்டத்திற்குப் புறம்பாக நடை பெறுவதைத் தடுப்பதில் அரசு, ஆசிரியர், கல்வியாளர்கள், பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்' என்று வீரமணி அறிவுறுத்தியுள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamilnadu) இதையும் படிங்க:"ஆளுநர் பேசியதற்கும் அசோக் நகர் பள்ளி சம்பவத்திற்கும் சம்பந்தம் உள்ளது"- ஆர்.எஸ் பாரதி பகிரங்க குற்றச்சாட்டு!