சென்னை: இந்தியாவில் உள்ள மிகப்பெரிய விமான நிலையங்களில் சென்னை விமான நிலையமும் ஒன்று. பல ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் விமான சேவை தொடங்கப்பட்டபோது விமானங்களில் வரும் பயணிகளின் வசதிக்காக சென்னை விமான நிலையத்தில் ப்ரீபெய்ட் டாக்ஸி மற்றும் ஆட்டோக்கள் இந்திய விமான நிலைய ஆணையத்தின் அனுமதியுடன் இயக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்திற்கு வருகைதரும் பயணிகள் வெளியில் வந்து தரைதளத்தில் அமைக்கப்பட்டுள்ள பிக்கப் பாய்ண்டில் நின்று வாடகை வாகனங்களில் ஏறி அவர்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு புறப்பட்டு செல்வார்கள். கடந்த சில ஆண்டுகளாக இந்த நடைமுறைதான் சென்னை விமான நிலையத்தில் பயன்பாட்டிலிருந்து வருகிறது.
இதுபோன்ற சூழலில், கடந்த வாரத்திலிருந்து திடீரென எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் இந்த முறையில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி, விமானங்களிலிருந்து இறங்கி வெளியில் வரும் பயணிகள் சுமார் ஒரு கி.மீ தூரம் நடந்து சென்று மல்டி லெவல் கார் பார்க்கிங் எனப்படும் அடுக்குமாடி கார் பார்க்கிங்கிற்கு சென்று ப்ரீபெய்ட் டாக்ஸி, ஓலா, ஊபர் போன்ற வாடகை வாகனங்களில் ஏறி செல்ல வேண்டும்.
அவ்வாறு பயணிகள் செல்வதற்கு, பயணிகள் வருகை பகுதியிலிருந்து மல்டி லெவல் கார் பார்க்கிங் பகுதிக்கு அழைத்துச் செல்ல இலவச பேட்டரி வாகனங்களை இந்திய விமான நிலையம் ஆணையம் சென்னை விமான நிலையத்தில் இயக்குகிறது. ஆனால், இந்த பேட்டரி வாகனங்கள் போதுமான அளவு இல்லாததால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகுவதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், பேட்டரி வாகனங்கள் மல்டி லெவல் கார் பார்க்கிங் கட்டிடத்தின் தரைப்பகுதியில் நிறுத்தப்படுகிறது. அங்கிருந்து பயணிகள் லிப்ட்கள் மூலம் மல்டி லெவல் கார் பார்க்கிங் இரண்டாவது தளம் இல்லையேல் மூன்றாவது தளம் சென்று வாகனங்களில் ஏறி செல்ல வேண்டும் என்று தனியார் மல்டி லெவல் கார் பார்க்கிங் ஊழியர்கள் பயணிகளிடம் தெரிவிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுமட்டும் அல்லாது, மல்டி லெவல் கார் பார்க்கிங்கில் மூன்று லிப்ட்டுகள் உள்ளன. ஒவ்வொரு லிப்டிலும் மூன்று அல்லது நான்கு பயணிகள் லக்கேஜ்களுடன் ஏறியதும் லிப்ட் ஓவர் லோடு ஆகிவிடுகிறது. இதனால் பயணிகள் பேட்டரி வாகனங்கள், லிப்ட்டுகள் ஆகியவற்றிற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது என்று கூறுகின்றனர்.
இதற்கிடையே இந்த மாற்றங்கள் குறித்து முறையான அறிவிப்புகள் எதுவும் இதுவரை வெளியிடப்பட்டதால் புதிதாக சென்னை விமான நிலையம் வரும் பயணிகள் எங்கு செல்வது என்று தெரியாமல் அலைந்து வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை விமானத்தில் பயணிகள் பெறும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
பயணிகளின் பரிதவிப்பு: இது குறித்து சூரத்தில் இருந்து விமான மூலம் சென்னை வந்த பயணி பத்மநாபன் என்பவர் கூறுகையில், "சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கான பிக்கப் பாய்ண்ட் பகுதியை வேறு இடத்திற்கு மாற்றி இருப்பது பயணிகளுக்கு மிகவும் சிரமமாக உள்ளது. நான் இதய நோயாளி இவ்வளவு தூரம் உடைமைகளை தூக்கிக்கொண்டு நடந்து வருவது என்பது மிகவும் சிரமமாக உள்ளது.
மேலும், விமான நிலையத்திலிருந்து கார் பார்க்கிங் பகுதிக்கு இயக்கப்படும் பேட்டரி வாகனங்களும் குறைவாக உள்ளதால் அதனை எதிர்பார்த்து வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. அங்கிருந்து நடந்து சென்று கார் பார்க்கிங் பிக்கப் பாயிண்ட் செல்வதற்கு முறையான வழிகாட்டுதல்கள் கூட இல்லை.