மெரினா மரணங்களுக்கு இதுதான் காரணமா? அது என்ன வெட் பல்ப் டெம்பரேச்சர்? - CHENNAI AIR SHOW DEATH REASON
விமான சாகச நிகழ்வில் வெயிலில் தாக்கத்தினால் ஐந்து பேர் மரணமடைந்ததைத் தொடர்ந்து, இது காலநிலை மாற்றத்தின் எச்சரிக்கை எனவும், 'வெட் பல்ப் டெம்பரேச்சர் இன்னும் அதிகமாக இருக்கும் எனவும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு எச்சரித்துள்ளது.
'வெட் பல்ப் டெம்பரேச்சர்' வரும் நாள்களில் இன்னும் அதிகமாக உணர முடியும் என பூவுலகின் நண்பர்கள் அமைப்பு எச்சரித்துள்ளது. (Etv Bharat)
இந்திய விமானப்படையின் 92-ஆவது ஆண்டுவிழா சென்னை மெரினா கடற்கரையில் கொண்டாடப்பட்டது. இதற்காக நேற்று (அக்டோபர் 6) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விமான சாகச நிகழ்ச்சியைக் காண பெருந்திரளான மக்கள் கூடினர். இதில் சுமார் 15 லட்சம் மக்கள் பங்கேற்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், வெயிலின் தாக்கத்தை தாங்கமுடியாமல் ஐந்து பேர் சுருண்டு விழுந்து உயிரிழந்தனர்.
ஒரு பக்கம் அரசின் குறைபாடு, குடிக்க தண்ணீர் கூட கிடைக்கவில்லை என மக்கள் குறை கூறினாலும், இதை காலநிலை மாற்றத்தின் எச்சரிக்கையாகக் கருத வேண்டும் என சூழலியல் அமைப்பான 'பூவுலகின் நண்பர்கள்' செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, இதை 'வெட் பல்ப் டெம்பரேச்சர்' (Wet Bulb Temperature) என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதென்ன 'வெட் பல்ப் டெம்பரேச்சர்' என்று யோசிக்க வேண்டாம். அதைக் குறித்து பார்க்கும் முன், நேற்றைய மெரினாவின் வானிலை நிலவரத்தைத் தெரிந்துகொள்வது அவசியம்.
சென்னை வானிலை:
நிகழ்வு நடந்த நேற்றைய தினம், சென்னையில் 36 டிகிரி செல்சியஸ் வெயில் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. அதன்படி, நுங்கம்பாக்கம் வானிலை கணக்கீட்டின் வெயிலின் அளவு 34.3 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது. ஆனால், இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், வெயிலின் தாக்கம் இப்படி இருந்தாலும், அதன் உணர் அளவு 42 டிகிரி செல்சியஸ் ஆக இருந்துள்ளது.
சிகிச்சை அளிக்கப்படும் பரபரப்பானக் காட்சிகள். (Etv Bharat Tamil Nadu)
இன்னும் எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், நீங்கள் மொபைலில் வானிலை நிலவரம் பார்க்கும்போது, Temp 34°C, Feels like 42°C என்று கவனித்திருப்பீர்கள். அதாவது, காற்றில் ஈரப்பதம் 70% மேல் இருந்தால், 34 டிகிரி வெயிலை, 42 டிகிரி அளவில் உணரமுடியும் என்பதை குறிப்பதாகும். 'வெட் பல்ப் டெம்பரேச்சர்' காரணமாகத் தான் இவ்வாறு அதிகளவு வெப்பநிலையை உணர முடிகிறது என்கிறது பூவுலகின் நண்பர்கள் அமைப்பு.
'வெட் பல்ப் டெம்பரேச்சர்' என்றால் என்ன?
வெப்பநிலை, காற்றின் ஈரப்பதம் ஆகியவற்றை வைத்து கணக்கிடப்படும் 'வெட் பல்ப் டெம்பரேச்சர்' 30 டிகிரியை கடந்து செல்லும்போது, அது மனிதர்களை கொல்லும் ஆபத்தான அளவாக நிர்ணயிக்கப்படுகிறது. இதனால் மனித உடலில் வியர்வை சுரப்பது குறைந்து, உடலின் வெப்பம் வெளியேற முடியாமல் 'ஹீட் ஸ்ட்ரோக்' (HeatStroke) ஏற்படுகிறது. தொடர்ச்சியாக உள் உறுப்புகள் செயலிழந்து மரணம் ஏற்படுகிறது.
வெட் பல்ப் டெம்பரேச்சர் எப்படி மனித உடலை பாதிக்கிறது. (AFP / ETV Bharat)
அதுமட்டுமில்லாமல், அதிகளவு மக்கள் ஒரே இடத்தில் கூடியதன் விளைவாக இன்னும் 2 டிகிரி வெப்பம் அதிகரித்திருக்கும் என்கிறது சூழலியல் அமைப்பு. மெரினாவில் நிகழ்ந்த 'வெட் பல்ப் டெம்பரேச்சர்' மரணங்கள் காலநிலை மாற்றத்திற்கான ஒரு எச்சரிக்கை மணி என குறிப்பிட்டுள்ள இவர்கள், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற அண்டை நாடுகளில் இதனால் ஏற்கனவே மரணங்கள் தொடர்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
"இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் மட்டும் மெக்காவிற்கு ஹஜ் புனித பயணம் மேற்கொண்டவர்களில் 1300 பேர் கடுமையான வெப்பத்தின் காரணமாக உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் வெப்ப அலையின் காரணமாக கோடையில் 733 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலின்போது வட இந்தியாவில் ஒரே நாளில் 58 பேர் வெப்ப அலையின் தாக்கத்தால் உயிரிழந்தனர். இதில், 33 பேர் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அலுவலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது." என பூவுலகின் நண்பர்கள் புள்ளிவிவரத்தை பகிர்ந்துள்ளனர்.
நீர்சத்துக் குறைபாட்டால் மயக்கமடைந்த மெரினா விமான சாகச நிகழ்ச்சி பார்வையாளருக்கு முதலுதவி அளிக்கும் மருத்துவர்கள். (ETV Bharat Tamil Nadu)
எச்சரிக்கையைப் பொருட்படுத்தாத அரசுகள்!
'வெட் பல்ப் டெம்பரேச்சர்', இதை மையமாக வைத்து சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த சிஎஸ்இ (CSE) ஆய்வறிக்கையில், மும்பை, டெல்லியைவிட தமிழ்நாட்டில்தான் வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருக்கும் என்று எச்சரித்திருந்தது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட கடந்த சில ஆண்டுகளாக 'வெட் பல்ப் டெம்பரேச்சர்' குறித்து பேசியிருக்கிறார்.
இவ்வளவு எச்சரிக்கைகள் இருந்தும், வானிலை நிலவரங்கள் அறிந்தும் சரியான திட்டமிடல்கள் இல்லாததால் ஈடுசெய்ய முடியாத உயிரிழப்பை நாம் சந்தித்திருக்கிறோம் என பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வருத்தம் தெரிவித்துள்ளது. இனி வரும் காலங்களில் இதுபோன்ற பெருங்கூட்டங்களை நிர்வகிக்க சரியான வழிமுறைகளை வகுத்து சிறந்த திட்டமிடலுடன் நிகழ்வுகளை நடத்த வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது.