தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பனி சூழ்ந்த பகுதிபோல் மாறிய கெலவரப்பள்ளி நீர்த்தேக்க அணை.. குவியல் குவியலாக வெளியேறும் நுரை! - Kelavarapalli Dam Chemical Foam - KELAVARAPALLI DAM CHEMICAL FOAM

Water With Chemical Foam in Kelavarapalli Dam: ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்த்தேக்க அணையில் இருந்து நச்சுத்தன்மை உடைய ரசாயனக் கழிவுகள் கலக்கப்பட்டு வெண்ணிற நுரையோடு தென்பெண்ணை ஆற்றில் நீர் வெளியேறுவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Foamy water coming out of the Kelavarapalli Dam
கெலவரப்பள்ளி நீர்த்தேக்க அணையிலிருந்து நுரையோடு வெளியேறும் நீர் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 15, 2024, 3:10 PM IST

கெலவரப்பள்ளி நீர்த்தேக்க அணையிலிருந்து நுரையோடு வெளியேறும் நீர் குறித்த வீடியோ (Credits - ETV Bharat Tamil Nadu)

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்த்தேக்க அணையில் இருந்து தொடர்ந்து மூன்றாவது நாளாக 560 கன அடி நீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்படப்பட்டுள்ளது. இந்த நீரானது, கர்நாடக மாநிலத்தில் உள்ள நந்தி மலையில் உருவாகி, கர்நாடகா வழியாக தமிழகத்தில் உள்ள பாகலூர் அருகே அமைந்துள்ள கெலவரப்பள்ளி நீர்த்தேக்க அணையை வந்தடைகிறது.

மேலும், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தென்பெண்ணை ஆற்றின் நீர்வரத்தை நம்பியே விவசாயம் மேற்கொள்கின்றனர். இந்த நிலையில், நச்சுத்தன்மை உடைய ரசாயனக் கழிவுகள் நீரில் கலக்கப்பட்டு, ஆற்றில் குவியல் குவியலாக நுரைபொங்கி துர்நாற்றத்துடன் நீரானது வெளியேறுகின்றது.

கருமை நிறத்தில் காட்சியளிக்கும் நீரின் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

மேலும், நச்சுத்தன்மை உடைய ரசாயனத்தோடு கருநிறத்தில் வெளியேறும் நீரில் 2 அடி உயரத்திற்கு நுரைபொங்கி மேகங்களைப் போல நகர்ந்து வருகின்ற சூழலில், துர்நாற்றமடிக்கும் நீரில் நுரைபொங்கி செல்வதை நோய் பரவும் அபாயத்தை உணராமல் பொதுமக்கள் விளையாடியும், செல்ஃபி எடுத்தும் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், "தென்பெண்ணை ஆற்று நீர் மாசடைவது குறித்து பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி கர்நாடகா - தமிழகம் இருமாநில மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் நீர் மாதிரிகளை சேமித்துச் சென்றபோதும் இதுவரை அதற்கான முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை" என்று இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அபாயத்தை உணராமல் செல்ஃபி எடுத்து விளையாடும் நபர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)

இதுகுறித்து சமூக ஆர்வலர் செந்தமிழ் பேசுகையில், "தென்பெண்ணை ஆறு கர்நாடகா மாநிலம் நந்தி மலையில் உற்பத்தியாகி தூய்மையாக வரும் நீர், கர்நாடகா - தமிழக எல்லைப் பகுதியில் உள்ள ரசாயன தொழிற்சாலைகள், சாயப்பட்டறைகள் உள்ளிட்ட தொழிற்சாலைகளில் இருந்து நச்சுத்தன்மை மிகுந்த ரசாயனம் நீரில் கலப்பதாலேயே, இந்த நீர் மாசடைந்து துர்நாற்றம் வீசுவதற்கான காரணமாக உள்ளது.

இந்த மாசடைந்த நீரால், ஓசூர் பகுதிகளில் உள்ள விவசாயிகள் மற்றும் அவர்களது கால்நடைகள் உள்ளிட்டவை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. மேலும், இந்த நீரைப் பயன்படுத்தும் மக்களுக்கும் உடல் ரீதியான பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

ஆகவே, தமிழக அரசு விவசாயிகளுக்கு உரிய விளக்கம், விழிப்புணர்வு அளித்து, ரசாயனம் கலந்த நீரை சுத்திகரிக்கப்பட்ட பிறகு விவசாயத்திற்கு திறந்துவிடும் திட்டத்தைத் தொடங்க வேண்டும். அதேபோல, இந்த நீர்நிலை பாதிப்புக்கு காரணமான தொழிற்சாலைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க:நடுக்காட்டில் பைக்கை பந்தாடிய காட்டு யானை.. வைரலாகும் வீடியோ!

ABOUT THE AUTHOR

...view details