சென்னை:விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, நீர் நிலைகளில் சிலைகளை கரைப்பதால் மாசு ஏற்படுகிறது என கூறியும், அறிவிக்கப்படாத நீர்நிலைகளில் சிலைகளை கரைப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரியும், சென்னை புதுப்பேட்டையை சேர்ந்த ஹரிஹரன் என்பவர் தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் கடந்த 2023ம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.
ஏற்கனவே, இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் திருத்தப்பட்ட விதிமுறைகளை அமல்படுத்துவதை உறுதிசெய்யும் வகையில், மாநில சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் தலைமையில், பொதுத் துறை செயலாளர், வருவாய் நிர்வாகத் துறை கூடுதல் தலைமை செயலாளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்து உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்திய கோபால் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில், பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் கொண்டு சிலைகளை தயாரிக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை தடை விதித்துள்ளது குறித்து விரிவான விளம்பரம் கொடுத்தால் மட்டுமே அந்த வகை சிலைகள் உற்பத்தியை தடுக்க முடியும் என்றும், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் திருத்தியமைக்கப்பட்ட விதிகளின் அடிப்படையில், விநாயகர் சதுர்த்திக்கு சில நாட்களுக்கு முன் நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.
தமிழக அரசு மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில், முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், தீர்ப்பாயம் பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளும் அமல்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தீர்ப்பாயம், அரசு அளித்த அறிக்கைகளை மேற்கோள் காட்டி, சிலைகள் கரைப்பதால் நீர் நிலைகள் மாசடைவது மட்டும் அல்லாமல், சிலைகளின் கரையாத பாகங்கள் எடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.