சென்னை:மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக அவரது மனைவியைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''கடந்த பல ஆண்டுகளாக தலித் மக்களுக்காக ஆம்ஸ்ட்ராங் உழைத்துள்ளார். ஆம்ஸ்ட்ராங் ஒரு வலிமையான தலித் தலைவர்,
ஆனால், சிலர் அவரை கொலை செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன். கைது செய்யப்பட்டவர்கள் மட்டுமல்லாமல், இவர்களை பின்னால் இருந்து இயக்கியவர்களை கண்டறிய வேண்டும்.
காவல் ஆணையரை மட்டும் மாற்றினால் போதாது. ஒரு தலித் தலைவருக்கு இந்த மாநிலத்தில் பாதுகாப்பு இல்லை, எனவே, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள தலித் தலைவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். கருணாநிதி ஒரு சிறந்த மனிதர், கருணாநிதி ஒரு காலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஆனால், தற்போது ஸ்டாலின் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கிறார். கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு வலிமையாக உள்ளது. தற்போது இருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் 5 ஆண்டுகள் ஆட்சி செய்யும்.