சென்னை:யூடியூப் மூலம் பயங்கரவாத அமைப்பிற்கு ஆட்கள் திரட்டியும், ஆட் சேர்ப்பு கூட்டங்களை நடத்தி மூளைச்சலவை செய்து ஹிஸ்ப்-உத்-தஹ்ரிர் என்ற அமைப்பிற்கு ஆட்கள் சேர்த்தது தொடர்பாக சென்னை சைபர் கிரைம் போலீசாரால் கடந்த மே மாதம் ராயப்பேட்டையைச் சேர்ந்த தந்தை மகன்கள் மூன்று பேர் உட்பட மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து, இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. தற்போது, இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ராயப்பேட்டையைச் சேர்ந்த டாக்டர் ஹமீது உசேன், அவரது தந்தை மன்சூர், சகோதரர் அப்துல் ரகுமான் அவர்களது நண்பர்களான முகமது மாரீஸ், காதர் நவாஸ் ஷெரீப், அகமது அலி உமாரி ஆகிய 6 நபர்களையும் கடந்த ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி முதல் முறையாக 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் மீண்டும் அதே 6 நபர்களை இரண்டாவது முறையாக கடந்த இரு தினங்களுக்கு முன்பு காவலில் எடுத்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், இந்த வழக்கில் தஞ்சையைச் சேர்ந்த முஷ்பூர் ரகுமான், அல்தாப் தாஹிப் ஆகியோரையும், பெங்களூரைச் சேர்ந்த ஒருவரையும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னையில் தொடரும் மாணவர்களின் அத்துமீறல்.. மாநகரப் பேருந்தின் மேற்கூரை மீது ஏறி அட்டகாசம்!
தற்போது, அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் அகமது மன்சூர் என்பவரைக் கைது செய்து, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தடை செய்யப்பட்ட அமைப்பிற்குப் பொறுப்பாளராகச் செயல்பட்டு ஆள் சேர்ப்பதில் முக்கிய பங்காற்றியது தெரியவந்தது. அதன் அடிப்படையில் நேற்று (அக்.10) காலை சென்னை தரமணி எத்திராஜ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.
என்ஐஏ அதிகாரிகள் அந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் ஆவணங்கள், தடை செய்யப்பட்ட இயக்கங்கள் தொடர்பான புத்தகங்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றியுள்ளதாகவும், அதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு ஹிஸ்ப்-உத்-தஹ்ரிர் அமைப்பைத் தடை செய்து உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "ஹிஸ்ப்-உத்-தஹ்ரிர் என்கிற அமைப்பு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளால் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த அமைப்பானது தீவிரவாதத்தைப் பரப்பி இளைஞர்களை மூளைச்சலவை செய்து ஆட்களைச் சேர்ப்பதும், ஜனநாயக அமைப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதும் தெரியவந்துள்ளது.
மேலும் ஐஎஸ்ஐஎஸ் (ISIS) பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பதும், தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பிலிருந்து இளைஞர்களை தவறாக வழி நடத்திய அதில் இணைக்கும் முனைப்பில் ஈடுபட்டு, பயங்கரவாத செயல்கள் செய்து வருவதாலும் இந்த அமைப்பை இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்