சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி சென்னை பெரம்பூரில் அவரது வீட்டின் வெளியே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக இதுவரையில் 11 பேர் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று காலையில் குன்றத்தூரைச் சேர்ந்த திருவேங்கடம் என்ற ரவுடி மாதாவரத்தில் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார். இவர் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங்கை கொலையாளிகள் சுற்றிவளைத்து வெட்டும் சிசிடிவி காட்சி வெளியானது.
அதில் பெரம்பூரில் வீடு கட்டும் பணிகளை ஆம்ஸ்ட்ராங் தனது நண்பர்களுடன் அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த பொழுது, ஆங்காங்கே பதுங்கி இருந்த ரவுடி கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தனர். அதில் ஆம்ஸ்ட்ராங்கைச் சுற்றி வளைத்து ரவுடிகள் கத்தியால் சரமாரியாக வெட்டுவது சிசிடிவி காட்சியில் தெள்ளத் தெளிவாக தெரிகிறது.