கோயம்புத்தூர்:கோயம்புத்தூர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டி அமைந்துள்ளதால் அடிக்கடி யானை உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளின் அருகே சுற்றித் திரிவது வாடிக்கையாக இருந்து வருகிறது. அவ்வப்போது யானைகள், சிறுத்தைகள், கரடிகள், மான்கள், காட்டு மாடுகள் ஆகியவை வனப்பகுதியை விட்டு வெளியேறி, உணவு மற்றும் தண்ணீர் தேடி அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளில் சுற்றி வருவது வழக்கம்.
அந்த வகையில் கடந்த சில மாதங்களாக கோயம்புத்தூர் தடாகம் சாலை கணுவாய் அடுத்த திருவள்ளுவர் நகர் மலைப் பகுதியில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகளவில் தென்பட்டு வருகிறது. இரவு வேலைகள் மட்டுமின்றி பகல் வேலைகளிலும் சிறுத்தைகள் அடிக்கடி சுற்றித் திரிவதால் பொதுமக்கள் பெரும் அச்சத்திற்கு ஆளாகியிருந்தனர். கடந்த இரு மாதங்களுக்கு முன் கணுவாய் பகுதியில் உள்ள வனத்தில் இருந்து வெளியேறிய கருஞ்சிறுத்தை அங்கிருந்த ஆடுகளை வேட்டையாடியது.
இதனைத் தொடர்ந்து அங்கு வந்த வனத்துறையினர், சிறுத்தை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினர். இந்த நிலையில் கோயம்புத்தூர் தடாகம் பகுதியில் வீட்டு சுற்றுச்சுவரில் நின்று கொண்டிருந்த கோழியை, சிறுத்தை கவ்வி பிடித்து செல்லும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. திருவள்ளுவர் நகர் பழனியப்பா லேஅவுட் பகுதியில் சக்திவேல் என்பவர் தனது வீட்டில் கோழிகளை வளர்த்து வருகிறார்.