தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வங்கி மோசடி முதல் சாமியார் வாழ்க்கை வரை.. 22 ஆண்டுகள் கழித்து சிக்கிய சலபதி ராவ்.. பலே நபர் சிக்கியது எப்படி? - SBI fraud case - SBI FRAUD CASE

sbi fraud case criminal chalapathi Rao: வெவ்வேறு மாநிலங்களில் பெயரையும், அடையாளத்தையும் மாற்றிக்கொண்டு பதுங்கி வாழ்ந்து வந்த முக்கிய குற்றவாளி சலபதி ராவ் என்பவரை 22 ஆண்டுகள் கழித்து தமிழ்நாட்டில் வைத்து சிபிஐ கைது செய்துள்ள சம்பவம் பெரும் திருப்பதை ஏற்படுத்தியுள்ளது.

கைதான சலபதி ராவ்
கைதான சலபதி ராவ் (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 6, 2024, 2:49 PM IST

திருநெல்வேலி: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஸ்டேட் வங்கியின் சந்துலால் பிரதாரி கிளையில் கணினி ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தவர் சலபதி ராவ். இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு மே மாதம் போலி ஆவணங்களை வைத்து ஸ்டேட் வங்கியில் 50 லட்ச ரூபாய் கடன் பெற்றதாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இதுகுறித்து விசாரணை நடந்து வந்த சூழலில் 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி சிபிஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதன் பின்னர் சலபதி ராவ் தலைமறைவாகி விட்டார்.

இறந்துவிட்டதாக அறிவிப்பு: அதனை அடுத்து ஜூலை 2004ஆம் ஆண்டு முதல் எனது கணவரை காணவில்லை என காமதிபுரா காவல் நிலையத்தில் அவரது மனைவி புகார் அளித்திருந்தார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு பதிவு செய்து தனது கணவர் காணாமல் போய் ஏழு ஆண்டுகள் கடந்த நிலையில் அவரை இறந்து விட்டதாக அறிவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார்.

இதற்கு மத்தியில், ஏப்ரல் 2013 ஆம் ஆண்டு சலபதிராவை அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக சிபிஐ அறிவித்து தேடி வந்தது. மேலும், குற்றம் சாட்டப்பட்டவரின் சொத்துக்களை முடக்க சிபிஐ முயற்சி செய்தபோது நீதிமன்றத்தில் தடையானை பெற்று அதனையும் சலபதி ராவின் மனைவி விடாமல் தடுத்திருந்தார். இந்த நிலையில், பல்வேறு தகவல்களை சலபதி ராவை கண்டுபிடிக்க சிபிஐ திரட்டி வந்த நிலையில் அவர் நெல்லை மாவட்டம் நரசிங்கநல்லூர் பகுதியில் நண்பர் ஒருவர் வீட்டில் தனது அடையாளங்களை மாற்றி பெயரை மாற்றி இருப்பதை கண்டறிந்து கைது செய்தது.

அதிர்ச்சி தகவல்கள்: இந்த நிலையில், சிபிஐ கைது செய்யப்பட்ட சலபதி ராவ் குறித்த தகவல்கள் சேகரித்தது தொடர்பான விளக்கத்தையும் வெளியிட்டுள்ளது. அதில் குற்றம் சாட்டப்பட்டவராக சலபதி ராவ் அறிவிக்கப்பட்ட நிலையில் ஹைதராபாத்தில் இருந்து சேலம் பகுதியில் தப்பி ஓடி விட்டதாகவும் அங்கு அவரது பெயரை வினித் குமார் என மாற்றி வைத்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

சேலம் பெண்ணுடன் திருமணம்: மேலும், சேலத்தில் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு தனக்கான புதிய அடையாளங்களாக ஆதார் அட்டை உள்ளிட்டவைகளையும் சலபதி ராவ் பெற்றுக் கொண்டுள்ளார். இருப்பினும் முதல் மனைவிக்கு பிறந்த மகனுடன் சலபதி ராவ் தொடர்பில் இருந்து வந்துள்ளார்.

இது போன்ற தகவல்கள் கிடைக்கப்பெற்ற நிலையில் சிபிஐ அவரை தேடி சேலம் சென்றபோது 2014 ஆம் ஆண்டு எந்த ஒரு தகவலும் இல்லாமல் சேலத்தில் இருந்து தப்பி ஓடி விட்டார். பின்னர் போபால் பகுதிக்கு சென்ற சலபதி ராவ் அங்கு வங்கி ஏஜெண்டாக பணி செய்து வந்துள்ளார். அங்கிருந்து அவர் உத்தரகாண்ட் மாநிலம் ருத்ராபூருக்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில் அங்கு ஒரு பள்ளியில் பணியில் சேர்ந்துள்ள தகவல் கிடைத்து சிபிஐ அங்கு சென்று பார்த்தபோது 2016 ஆம் ஆண்டு அங்கிருந்து தப்பி ஓடியதாக தகவல் சிபிஐக்கு கிடைத்துள்ளது.

ஆசிரமத்தில் சாமியார் வேடம்: பின்னர் உத்தரகாண்ட் மாநிலத்தில் சலபதி ராவ் பயன்படுத்திய வீட்டின் முகவரி மின்னஞ்சல் முகவரி ஆதார் அட்டை உள்ளிட்ட அடையாளங்களை வைத்து தீவிரமாக சிபிஐ அவரை தேட தொடங்கியது. மேலும் சிபிஐக்கு கிடைத்த தகவலை வைத்து தேடிய போது அவுரங்காபாத் பகுதியில் உள்ள வெருள் கிராமத்தில் இருக்கும் ஒரு ஆசிரமத்தில் 'விதித்மானந்த தீர்த்தர்' என்ற பெயருடன் தனது அடையாள ஆவணங்களை மாற்றி தங்கியிருந்துள்ளார். பின்னர் அங்கிருந்து 2021 ஆம் ஆண்டு வெளியேறி ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் ஆசிரமத்திற்கு சென்றுள்ளார்.

கடைசியாக அந்த ஆசிரமத்தை ஏமாற்றி ரூ.70 லட்சத்துடன் ஓட்டம் பிடித்து அங்கிருந்து ஜூலை மாதம் வெளியேறி தமிழகத்தின் நெல்லைக்கு வந்துள்ளார். அங்கு நரசிங்கநல்லூர் பகுதியில் நண்பர் ஒருவரது வீட்டில் தங்கி இருந்ததை சிபிஐ கண்டறிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து நெல்லை மாவட்டத்திற்கு வந்த சிபிஐ சுற்றி வளைத்து சலபதிராவை கைது செய்தது. 22 ஆண்டுகள் போராட்டத்திற்கு பின்னர் சிபிஐ பண மோசடி வழக்கில் குற்றவாளியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

இதையும் படிங்க: பள்ளி வாசல் அருகே பயங்கரம்.. நெல்லையில் நெட் சென்டர் உரிமையாளர் வெட்டிக்கொலை!

ABOUT THE AUTHOR

...view details