சென்னை:தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த ஆறாம் தேதி, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ரயிலில் கொண்டு செல்லப்பட்ட ரூ.4 கோடி பணத்தை பறிமுதல் செய்து அதனைக் கொண்டு வந்த சதீஷ், நவீன், பெருமாள் ஆகிய மூன்று பேரை கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஓட்டலில் இருந்து பணம் கொண்டு வருவதாகவும்; இது தேர்தல் செலவுக்காக கொண்டு செல்லப்படுவதாகவும் அவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.
மேலும், இதில் பல்வேறு நபர்களுக்கு தொடர்பு உள்ளது எனவும் சென்னையில் பல்வேறு இடங்களில் இருந்து பணம் கைமாற்றிக் கொண்டு செல்வதாகவும் அவர்கள் வாக்குமூலம் அளித்ததன் அடிப்படையில், நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் மற்றும் பாஜக நிர்வாகி கோவர்தனுக்கு சொந்தமான இடங்கள், வீடுகள், ஓட்டல்களில் தாம்பரம் காவல் துறையினர் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளை இணைந்து சோதனை நடத்தி பணம் முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியினர்.
மேலும், இதில் பல்வேறு நபர்களுக்கு சம்மன் அனுப்பிய தாம்பரம் போலீசார், சிலரிடம் விசாரணை செய்து வாக்குமூலங்களை வீடியோவாக பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில், இந்த வழக்கை தீவிரமாக விசாரிக்க கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சிபிசிஐடி போலீசாருக்கு இந்த வழக்கை மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.
இந்த நிலையில், சிபிசிஐடி போலீசார் நேற்று முன்தினம் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களைப் பெற்ற பின்பு தாம்பரம் ரயில் நிலையத்தில் பணத்தோடு சிக்கிய மூன்று பேர் மீதும் நான்கு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.