திருநெல்வேலி: நெல்லை காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் சந்தேக மரணம் பற்றிய வழக்கு தொடர்பாக, இரண்டாவது நாளாக இன்று சிபிசிஐடி போலீசார் கரைசுத்துபுதூர் பகுதியில் விசாரணை மேற்கொண்டனர். சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் உலக ராணி, ஏடிஎஸ்பி சங்கர் ஆகியோர் இன்று காலை முதலே கரைசுத்துபுதூரில் உள்ள ஜெயக்குமார் வீட்டின் அருகே உள்ள தோட்டத்திலும் அவரது உறவினர்களிடமும் விசாரணை நடத்தினர்.
இதன்படி, அவரது வீடு, தோட்டம் மற்றும் வீட்டின் அருகே உள்ள காங்கிரஸ் மாவட்ட அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் குழுவாகப் பிரிந்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், ஜெயகுமாருக்குச் சொந்தமான தோட்டத்தில் பணியாற்றும் தோட்ட ஊழியர் ஜெயக்குமாரின் மகன் கருத்தைய ஜெப்ரின், ஜெயக்குமார் மனைவி ஜெயந்தி மற்றும் குடும்பத்தினர் உள்ளிட்டோரிடமும் சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், இன்று சிபிசிஐடி எஸ்.பி முத்தரசி சம்பவ இடத்தை வந்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார், அவர் ஜெயக்குமார் இறந்து கிடந்த தோட்டத்தில் உள்ள குப்பை மேட்டையும் பார்வையிட்டார். அவருடன் இந்த வழக்கு சம்பந்தமாக விசாரணை நடத்தி வந்த வள்ளியூர் டிஎஸ்பி யோகேஸ்வரன் மற்றும் தடயவியல் நிபுணர்கள் ஆனந்தி தலைமையிலான குழுவினரும் ஆய்வு செய்தனர்.