மயிலாடுதுறை: கர்நாடக மாநிலம், குடகுமலையில் உற்பத்தியாகும் காவிரி நீர் பல்லாயிரம் மைல்கள் கடந்து கடைமடை மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் கடலில் கலக்கிறது. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால், மேட்டூர் அணை நிரம்பி உபரி நீர் கடந்த ஜூலை 28ஆம் தேதி திறக்கப்பட்டது.
இந்நிலையில், கல்லணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் மயிலாடுதுறை மாவட்டம் வந்து சேராததால் இன்று நீர்நிலைகளில் ஆடிப்பெருக்கு விழா பொலிவிழுந்தது. இந்நிலையில், இரவு 8.10 மணியளவில் காவிரி நீர் மயிலாடுதுறை மாவட்ட எல்லையை வந்தடைந்தது.
மாவட்ட எல்லையான திருவாலங்காடு, விக்ரமன் ஆறுகளின் தலைப்பு பகுதியில் உள்ள முதல் கதவணை நீர் தேக்கத்திற்கு வந்து சேர்ந்தது. நீர்வள ஆதாரத் துறையினர் உதவி செயற்பொறியாளர் ஜெயராமன் தலைமையில் காவிரி நீரை வரவேற்று பொதுமக்கள் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் செய்து வினாடிக்கு 1,100 கன அடி வீதம் தண்ணீரை திறந்து விட்டனர்.