தஞ்சாவூர்:காவிரி உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தலைமையில் மேகதாது அணை கட்டுமான திட்டத்திற்கு எதிராக இன்று (பிப்.16) தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தற்போது, காவிரியில் மேகதாது அணை கட்ட முயலும் கர்நாடகா அரசின் சட்டவிரோத திட்டத்திற்கு தடை கோரி தமிழ்நாடு அரசு போட்ட வழக்கு உச்சநீதிமன்ற விசாரணையில் உள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையம் என்பது கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களுக்கும் காவிரி நீரை பகிர்ந்து அளிப்பதற்காக மட்டுமே அதிகாரம் கொண்டது. ஆனால் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் ஹல்தர் கர்நாடகாவிற்கு ஆதரவாக செயல்படுவதாக பலரும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் மேகதாது அணையை அனுமதிக்கும் மத்திய அரசைக் கண்டித்தும், கர்நாடகாவுக்கு ஆதரவாக செயல்படும் காவிரி ஆணையத் தலைவர் ஹல்தர் கொடும்பாவி எரிப்பு போராட்டம் இன்று நடைபெறும் எனவும், நமது காவிரியைக் காக்கும் இந்த போராட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் எனவும், ஒரு வாரத்திற்கு முன்பு தஞ்சையில் நடந்த காவிரி உரிமை மீட்புக் குழு கலந்தாய்வுக் கூட்டத்தில் அதன் ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தஞ்சை பனகல் கட்டடம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் மத்திய, மாநில அரசை கண்டித்து விவசாயிகள் கோஷமிட்டனர். இந்த போராட்டத்தில் நிர்வாகிகள் மணிமொழியன், ரமேஷ், ராசேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் காவிரி ஆணைய தலைவர் ஹல்தர் கொடும்பாவியை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.