காவிரி ஆணைய தலைவர் ஹல்தர் கொடும்பாவி எரிப்பு போராட்டம் தஞ்சாவூர்: காவிரி உரிமை மீட்புக் குழு கலந்தாய்வுக் கூட்டம், ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தலைமையில், நேற்று (பிப்.8) தஞ்சையில் நடைபெற்றது. காவிரியில் மேகதாது அணை திட்டத்திற்கு தடை கோரி, தமிழ்நாடு அரசு போட்ட வழக்கு உச்ச நீதிமன்ற விசாரணையில் உள்ளது.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், நீர்வளத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சந்திப் சக்சேனா கலந்து கொண்டு, மேகதாது அணை விவாதத்திற்கு வந்தபோது எதிர்ப்பு குரல் கொடுக்காமல், தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து தமிழ்நாடு அரசும் விளக்கம் ஏதும் தெரிவிக்கவில்லை என பிப்.5ஆம் தேதி விவசாய சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீர்மான நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, இது குறித்து கண்டன அறிக்கையும் வெளியிட்டிருந்தார்.
தற்போது மேகதாது அணையை அனுமதிக்கும் மத்திய அரசைக் கண்டித்தும், கர்நாடகாவுக்கு ஆதரவாக செயல்படும் காவிரி ஆணையத் தலைவர் ஹல்தர் கொடும்பாவி எரிப்பு போராட்டம், வருகிற 16ஆம் தேதி தஞ்சையில் நடத்தப் போவதாகவும், இந்த போராட்டத்திற்கு விவசாயிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், இக்கூட்டத்தில் நிர்வாகிகள் மணிமொழியன், ராசேந்திரன், ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன், "காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், இந்த முறை தமிழ்நாடு அரசு அதிகாரி கலந்து கொண்டது ஏன்? எதிர்த்து வாக்காளித்தாலும் செல்லாது, பெரும்பான்மை நம்மிடம் இல்லை, ஜனநாயக முகப்பூச்சு அதற்கு பூசப்படும் எனத் தெரிந்தும் கலந்து கொண்டது எப்படி என்று தமிழ்நாடு முதலமைச்சர்தான் பதில் சொல்ல வேண்டும்.
தமிழ்நாடு நீர்வளத்துறை செயலாளர் சந்திப் சக்சேனா எதற்காக கலந்து கொண்டார்? கலந்து கொண்டு எதிர்த்து வாக்களித்தல் சூழ்ச்சியானது. பெண்ணாறு திட்டத்தை காவேரியில் இணைத்தது என்ன நியாயம்? அதை நாம் ஏன் ஏற்க வேண்டும்? இந்த சூழ்ச்சியில் தமிழ்நாடு அரசு, இந்திய அரசு, கர்நாடக அரசு மூன்றும் சேர்ந்து இருக்கும் என சந்தேகப்படுகிறோம். ஏனென்றால் காவேரிப் பாசன விவசாயிகள், காவேரித் தண்ணீரை குடிநீராக குடிப்பவர்களின் கழுத்தை அறுக்கக் கூடிய இந்த வேலை, பிப்ரவரி 1ஆம் தேதி நடந்தது. பலரும் இதை எதிர்க்கின்றனர்.
இதற்கு ஏன் தமிழ்நாடு அரசும், முதலமைச்சரும் விளக்கம் கொடுக்கவில்லை? முதல்முறையாக அவர்களுடைய செயலாளர் கலந்து கொண்டுள்ளனர், அது எப்படி? மேகேதாது தடுப்பணைத் திட்டத்தை அனுமதிக்கக் கூடாது. இதனைத் தடுக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ, அதை செய்ய வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் மேகேதாட்டு திட்டம் தொடர்பாக தடை கோரி போட்ட வழக்கு அப்படியே நிலுவையில் உள்ளது.
இதற்கெல்லாம் முக்கிய காரணம், காவிரி ஆணையத் தலைவர் ஹல்தர். இவர் பணி ஓய்வுக்குப் பிறகு, மோடியின் பரிசாக காவிரி ஆணையத் தலைவரானவர். ஹல்தர் என்ற கொடும்பாவியை தஞ்சையில் வரும் பிப்.16ஆம் தேதி காலை 10 மணிக்கு கொளுத்துவது என்று காவிரி உரிமை மீட்புக் குழு முடிவு செய்துள்ளது. ஆகையால், நமது காவிரியைக் காக்கும் இந்த போராட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: புதுச்சேரி பாஜகவில் வேட்பாளர் இல்லையா? - அமைச்சர் நமச்சிவாயம் அளித்த பதில்!