தஞ்சாவூர்: கடந்த மூன்று மாதங்களில் சீர்மரபினர் நல வாரியத்தில் 15 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு, அதில் 10 ஆயிரம் உறுப்பினர்களுக்கு நலவாரிய அட்டை வழங்கப்பட்டிருக்கிறது என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல வாரியம் மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (பிப்ரவரி 08) நடைபெற்றுள்ளது. இதில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மற்றும் சீர்மரபினர் நலவாரிய தலைவர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்துக்கொண்டுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் மெய்யநாதன் கூறுகையில், “2024-ஆம் ஆண்டு வரை 15 மாவட்டங்களில் 2017 சீர்மரபினர் நலவாரிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டிருந்தனர். கடந்த மூன்று மாத காலத்திற்குள், 15 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு, அதில் 10 ஆயிரம் உறுப்பினர்களுக்கு நலவாரிய அட்டை வழங்கப்பட்டிருக்கிறது.
சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு தான் எடுக்க வேண்டும். 2021-ஆம் ஆண்டு மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுத்திருக்க வேண்டும். ஆனால், மூன்று ஆண்டுகளை கடந்தும் தற்போது வரை மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பை எடுக்கவில்லை.