சென்னை:பள்ளிகளில் மாணவர்களின் சாதி அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் கயிறு, பொட்டு வைக்க தடை விதிக்க வேண்டும் என்று ஒய்வுப்பெற்ற நீதிபதி சந்துரு குழு தமிழக அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
பள்ளிகளில் மாணவர்களால் சாதியை குறிக்கும் வகையில் உள்ள வண்ண கயிறுக் கட்டுதல், மோதிரங்கள், நெற்றியில் போட்டு வைத்தல், சைக்கிள்களில் பெயிண்ட் அடித்தல் ஆகியவற்றைத் தடை செய்ய வேண்டும் என்ற பரிந்துரையை ஒய்வுப்பெற்ற நீதிபதி சந்துரு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அளித்துள்ளார். அத்துடன், ஆதிதிராவிடர், கள்ளர் பள்ளிகள் என்பதை அரசுப் பள்ளிகள் என உடனடியாக மாற்றம் செய்ய வேண்டும் எனவும், மாணவர்களின் சாதி குறித்த விபரங்களை மற்றவர்களுக்கு தெரியும் வகையில் வைக்கக்கூடாது என்பது உள்ளிட்ட பரிந்துரைகளை தமிழக அரசுக்கு அவர் அளித்துள்ளார்.
20 உடனடி பரிந்துரைகள்:பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் சாதி, இன உணர்வுகளால் உருவாகும் வன்முறைகளை தவிர்க்கவும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் வழிவகுத்திட அமைக்கப்பட்ட ஒய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான ஒரு நபர் குழு தனது அறிக்கையை முதலமைச்சர் முக ஸ்டாலினிடம் அளித்துள்ளது. 650 பக்கங்கள் கொண்ட விரிவான இந்த அறிக்கையில் 14 அத்தியாயங்களும், 6 இணைப்புகளும் இடம் பெற்றுள்ளன. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தீர்க்க வேண்டிய 20 உடனடி பரிந்துரைகளும், நீண்டகாலத்தில் தீர்க்க வேண்டிய மூன்று பரிந்துரைகளையும் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இன உணர்வுகள் காரணமாக உருவாகும் வன்முறைகளைத் தவிர்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுத்த வழிமுறைகள் வகுக்கவும் ஓய்வுபெற்ற நீதியரசர் கே. சந்துரு தலைமையில் ஒரு நபர் குழுவை அமைத்து 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 12 ந் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
நாங்குநேரி சம்பவமும், ஒரு நபர் குழுவும்:திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் பள்ளி மாணவர் மற்றும் அவரது குடும்பத்தினர், சக மாணவர்களால் மிகக்கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நாங்குநேரி சம்பவம் மூலம் சாதி, இனப் பிரச்சினைகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களில் சில பகுதியினர் தேவையற்ற வகையில் ஈடுபட்டு வருகின்றனர் என்ற கசப்பான உண்மை அரசுக்கு தெரிய வந்தது.
இளைய சமுதாயத்தினரிடையே சாதி, இன உணர்வு பரவியிருப்பது எதிர்காலத் தமிழ்நாட்டின் நலனுக்கு உகந்ததல்ல. இது உடனடியாக சரி செய்யப்பட வேண்டிய ஒரு முக்கியமானப் பிரச்சினை என்பதால், இதில், அரசு எந்த வகையான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்தும், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இனப் பிரிவினைகள் இல்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்கிட மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிட ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்திட
உத்தரவிட்டுள்ளதாகவும், கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், சமூக சிந்தனையாளர்கள் என பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கருத்துக்களைப் பெற்று அதனடிப்படையில் இக்குழு அரசுக்கு விரைவில் அறிக்கை சமர்ப்பிக்கும் எனவும் முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்.
அதன்படி, ஒய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான ஒரு நபர் குழு பல்வேறுத் தரப்பினரிடம் கருத்துகளை கேட்டது. மேலும் திருநெல்வேலியில் பாதிக்கப்பட்ட மாணவரையும், பிறரையும் சந்தித்து கருத்துகளை கேட்டறிந்தது. மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று மாணவர்களிடம் கருத்துகளை கேட்டறிந்தது. பல்வேறுத் தரவுகளை உள்ளடக்கிய தனது ஆய்வறிக்கையை மே மாதம் 31 ந் தேதி இறுதிச் செய்தது.
சாதி அடையாளங்கள்:இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் தலைமைச் செயலகத்தில் ஒய்வுபெற்ற நீதியரசர் சந்துரு, தனது 650 பக்கங்கள் கொண்ட அறிக்கையை இன்று அளித்துள்ளார். அதில் முக்கியமாக 20 பரிந்துரைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும், மூன்று பரிந்துரைகளை நீண்டகாலத்தில் நிறைவேற்றலாம் எனவும் தெரிவிக்ப்பட்டுள்ளது.
குறிப்பாக, கல்வி நிறுவனங்களில் இருக்கும் ஜாதி பெயர்களை நீக்க வேண்டும். மாணவர்கள் எந்த ஒதுக்கீட்டில் சேர்ந்தார்கள் என்ற விவரத்தை பதிவேடுகளில் இருந்து நீக்குதல், பள்ளிகளில் மாணவர்களால் சாதியை குறிக்கும் வகையில் உள்ள வண்ண கயிறுக் கட்டுதல், மோதிரங்கள், நெற்றியில் போட்டு வைத்தல் , சைக்கிள்களில் பெயிண்ட் அடித்தல் ஆகியவற்றைத் தடை செய்தல் போன்றவை முக்கியமான பரிந்துரைகளாக அலிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளில் அறநெறி வகுப்புகளை நடத்துதல், சாரணர், சாரணியர் அமைப்பை வலுப்படுத்துதல் மற்றும் புதிய மாணவர் படையை நிறுவுதல், மாணவர் சங்கத் தேர்தல்களை நடத்துதல், பள்ளி பாடத்திட்டத்தை கண்காணித்தல், ஆசிரியர் பயிற்சித் திட்டங்களை மேம்படுத்துதல் போன்ற பரிந்துரைகளையும் நீதிபதி கே.சந்துரு குழு தமிழக அரசுக்கு அளித்துள்ளது.
இதையும் படிங்க:நீட் தேர்வு குளறுபடியை சிபிஐ விசாரிக்க வேண்டும்: இந்திய மருத்துவ சங்கம் தமிழ்நாடு கிளை கோரிக்கை!