மதுரை: சித்திரைத் திருவிழாவின் போது கள்ளழகரைச் சாதிய ரீதியான தனியார் மண்டகப்படிகளுக்குக் கொண்டு செல்ல தடை விதிக்க கோரிய வழக்கில், கள்ளழகர் திருவிழா பல லட்ச பக்தர்கள் வரக்கூடிய மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவாகும். எனவே, போதிய பாதுகாப்பு வசதிகளும், அடிப்படைத் தேவைகளையும் அரசு தரப்பில் செய்து கொடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.
மதுரை மானகிரி பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "ஒவ்வொரு ஆண்டும் மதுரையில் சித்திரைத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது. சாதி, மதம், இனம், மொழி என அனைத்து வேறுபாடுகளையும் களைந்து பொதுமக்களால் கொண்டாடப்படுகிறது. ஆனால், கட்டணம் பெற்றுக் கொண்டு சில சாதி அமைப்புக்குச் சொந்தமான தனியார் மண்டகப்படிகளுக்கும், தனியாருக்குச் சொந்தமான இடங்களுக்கும் கள்ளழகரைக் கொண்டு செல்லும் நிலை உள்ளது. இதனால், மக்களிடையே வேறுபாடு ஏற்படும் நிலை உள்ளது.
இது தொடர்பாக அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே, இந்த ஆண்டு சித்திரைத் திருவிழாவில் சாதி ரீதியான தனியார் மண்டகப்படிகள் மற்றும் தனி நபர்களுக்குச் சொந்தமான இடங்களுக்குக் கள்ளழகரைக் கொண்டு செல்ல தடை விதிக்க வேண்டும். மேலும் கள்ளழகரைப் பாரம்பரிய மண்டகப்படிகளுக்கு மட்டுமே கொண்டு செல்ல உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.