தூத்துக்குடி:திருச்செந்தூர் அருகே உள்ள தண்டுபத்து கிராமத்தில், கடந்த 22ஆம் தேதி இரவு 'இந்தியா' கூட்டணியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமை வகித்த இக்கூட்டத்தில், மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
அப்போது கூட்டத்தில் பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி காமராஜரைப் பற்றி புகழாரம் பாடுகிறார். ஆனால், காமராஜர் டெல்லியில் இருந்தபோது அவரை கொல்ல முயற்சித்ததே பாஜகவினர் தான் எனக் கூறியதோடு ஒருமையில் கடுமையான விமர்சனம் செய்தார். மேலும், காமராஜரைப் பற்றி பேச இவர்களுக்கு எவ்வித தகுதியும் இல்லை எனக் கூறி பிரதமர் மோடியையும், பாஜகவினரையும் கொச்சை வார்த்தைகளில் சாடினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து, அமைச்சரின் இந்த அவதூறு விமர்சனத்திற்கு பாஜகவினர் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். இந்நிலையில், திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடியை கொச்சை வார்த்தைகளால் விமர்சித்ததற்கு கண்டனம் தெரிவித்து, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன், தூத்துக்குடி மாவட்ட தேர்தல் பிரிவு அலுவலகத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என புகார் அளித்திருந்தார்.
இந்த நிலையில், மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது 292/B (பிறருக்கு தொல்லை தரும் வகையில் பொது இடத்தில ஆபாசச் செயலைப் புரிந்தல் அல்லது ஆபாச பாடலைப் பாடுதல், வாசகத்தை உச்சரித்தல்) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:'திமுகவிற்கும், அதிமுகவிற்கும் தான் தேர்தலில் போட்டி..திமுகவின் ஊழல் பட்டியல் ரெடி' - ஈபிஎஸ் ஆவேசம் - Edappadi K Palaniswami