சென்னை: சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர், பாலாஜி நகர், துரைக்கண்ணு தெருவை சேர்ந்தவர் ஜெயராம். இவரது மனைவி அஸ்வினி.
ஜெயராம் அதே பகுதியில் "யங் ஸ்போர்ட்ஸ் ஆஃப் இந்தியா" என்ற பெயரில் அலுவலகம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், தான் ஒலிம்பிக் விளையாட்டு கமிட்டியில் உறுப்பினர் என்றும், சர்வதேச விளையாட்டுகளில் நடுவராக இருப்பதாகவும் ஜெயராம் தனக்குத் தானே விசிட்டிங் கார்டு தயார் செய்து வைத்திருந்தார். மேலும், ஜெயராம் தன்னை சந்திக்க வரும் நபர்களிடம், ''நான் பாஜகவில் முக்கிய பொறுப்பில் இருப்பதால், எனக்கு மத்திய அமைச்சர்கள் அனைவரும் மிக நெருக்கம். அதனால் நான் நினைத்தால் மத்திய அரசு வேலைகளை ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வாங்கி தருவேன்'' என ஆசை வார்த்தைகளை கூறி வந்துள்ளார்.
அதனை உண்மையென்று நம்பிய வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த லோகேஷ் குமார் (32) ஜெயராமிடம் வேலை வாங்கித் தருமாறு அணுகினார். அவரிடம் இருந்து பல்வேறு கட்டங்களாக ரூ.17 லட்சம் வரை பெற்றுக் கொண்ட ஜெயராம், அவரது மனைவி அஸ்வினி, அலுவலக உதவியாளர் பிரியா ஆகியோர் வேலை வாங்கிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்தனர்.
ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த லோகேஷ் குமார் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்ட போது, அவர்கள் வேலைக்கான ஒரு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரை வழங்கியதாக கூறப்படுகிறது. அதனை உண்மை என்று நம்பி எடுத்துச் சென்ற இளைஞருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அது போலி நியமன ஆணை என்பது தெரிய வந்ததால், அது குறித்து ஜெயராமிடம் லோகேஷ் குமார் முறையிட்டுள்ளார். அத்துடன் தன்னிடம் ஏமாற்றி வாங்கிய பணத்தை உடனடியாக திருப்பித் தருமாறு கூறினார்.