தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேளச்சேரி மேம்பாலத்தில் மூன்றாவது நாளாக வரிசைக்கட்டி நிற்கும் வாகனங்கள்..உரிமையாளர்கள் கூறுவதென்ன? - CHENNAI RAINS

சென்னையில் மழையின் தாக்கம் குறைந்துள்ள நிலையில், மீண்டும் கனமழை பெய்யுமோ? என்ற அச்சத்தில் வேளச்சேரி மேம்பாலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை எடுக்க அதன் உரிமையாளர்கள் முன்வரவில்லை.

மேம்பாலத்தில் நிற்கும் வாகனங்கள்
மேம்பாலத்தில் நிற்கும் வாகனங்கள் (Credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 16, 2024, 4:32 PM IST

சென்னை:வடகிழக்கு பருவமழையின் காரணமாக வெள்ளம் ஏற்படும் என்ற அச்சத்தால் வேளச்சேரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பொதுமக்கள் நேற்று முன்தினம் தங்களது வாகனங்களை வேளச்சேரி மேம்பாலத்தின் மேல் நிறுத்திவிட்டுச் சென்றனர். இதனையடுத்து போக்குவரத்து போலீசார் அங்குள்ள வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர்.

இருப்பினும் பாலங்களில் நிறுத்தப்பட்ட வாகனங்களுக்காக அபராதம் விதிக்கப்படவில்லை என தமிழ்நாடு காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "மேம்பாலத்தின் மேல் நிறுத்திவிட்டு வைக்கப்பட்டுள்ள வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு இருந்தால் அது திரும்பப் பெறப்படும். பொதுமக்களுக்கு எந்த ஒரு இடையூறும் ஏற்படக் கூடாது என்பதால் உடனடியாக தங்களது வாகனங்களை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தி இருந்தார்.

வாகன உரிமையாளர் பேட்டி (Credit - ETV Bharat Tamil Nadu)

குறைந்த மழை:சென்னைக்கு இன்று ரெட் அலெர்ட் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது தென் ஆந்திராவை நோக்கி நகர்ந்துள்ளதால், நேற்று பெய்த அளவிற்கு இன்று மழை பெய்யவில்லை. இதன் காரணமாக மக்கள் அனைவரும் தங்களது வேலைகளுக்கு வழக்கம் போல செல்ல ஆரம்பித்தனர்.

3வது நாளாக நிற்கும் வாகனங்கள்:இருப்பினும் தற்போது வேளச்சேரியில் உள்ள மேம்பாலங்களில் மூன்றாவது நாளாக வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. நேற்று முன் தினமே நிறுத்தப்பட்ட வாகனங்கள் அனைத்தும் இன்று வரை நிறுத்தப்பட்டுள்ளது. அதில் சிலர் மட்டும் தங்களது வாகனத்தை வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

இதையும் படிங்க:மழை வெள்ளத்தில் சிக்கிய பைக், கார்களை பாதுகாப்பது எப்படி? - மெக்கானிக் தரும் டிப்ஸ்!

20 லட்ச ரூபாய் வீணாகிவிட்டது:இது குறித்து காரின் உரிமையாளர் பரத் என்பர் கூறுகையில், "போன முறை மழை வந்ததில் எங்களது கார் வெள்ளத்தில் அடித்து சென்றுவிட்டது. இதனால் 20 லட்ச ரூபாய்க்கு மேல் எங்களுக்கு வீணாகிவிட்டது. இந்த முறையும் அவ்வாறு ஆகும் என பயந்துதான் காரை மேம்பாலத்தில் நிறுத்தினோம்.

மழை நீர் தேங்கிய இடங்களில் தற்போது எல்லா நீரும் விடிந்துவிட்டது. இப்போது காரை வீட்டிற்கு எடுத்துச் செல்லப் போகிறோம். இதற்கு காவல் துறையினர் அபராதம் விதித்து கொண்டு இருந்தனர். இருந்தாலும் மேலிடத்தின் உத்தரவினால் அபராதம் விதிப்பதை நிறுத்திவிட்டனர்.

தமிழக அரசு இந்த மழையை சிறப்பாக கையாண்டுள்ளது. வெயில் காலத்தில் கூட மின்சாரம் தடை படும் நிலை இருக்கும். ஆனால் இந்த மழையில் மின்தடை ஏற்படாமல் பார்த்துக்கொண்டனர். தண்ணீர் தேங்கிய இடங்களில் சீக்கிரமே மோட்டார் வைத்து மழைநீரை வடிய வைத்துவிட்டனர்" என தெரிவித்தனர்.

தவறாகத் தெரியவில்லை:இதனைத் தொடர்ந்து வேளச்சேரியை சேர்ந்த ஆனந்த் ராமசாமி என்பவர் கூறுகையில்,"மழைக் காலங்களில் மக்கள் இவ்வாறு செய்வது வழக்கம் தான். கடந்த முறை மக்கள் நிறைய அவதிப்பட்டனர். இந்த முறை முன்னெச்சரிக்கையாக வாகனத்தை மேம்பாலத்தில் நிறுத்திவிட்டனர்.

ஒரு வேளச்சேரியில் வசிப்பவனாக எனக்கு இது தவறாகத் தெரியவில்லை. வெள்ளத்தில் பாதிக்கப்பட்டால் இன்சூரன்ஸ் கூட எடுக்க மாட்டார்கள். ஏற்கனவே இது பள்ளமான பகுதி என்பதால் உயரமான இடங்களில் வாகனத்தை நிறுத்துவது சரியானது. இன்று ரெட் அலர்ட் என்றும் நாளையும் மழை பெய்யும் என்று சொல்லியிருந்தனர். எனவே மீண்டும் இவ்வாறு நடக்கக் கூடாது என்ற பயத்தினால் தான் இன்னும் காரை எடுக்கவில்லை" என தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details