திருவண்ணாமலை: கலசபாக்கம் அடுத்த அலங்காரமங்கலம் பகுதியின் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவர் சாமிகண்ணு. இவரது மனைவி விஜயலெட்சுமி, உடல்நலக்குறைவால் சேத்துப்பட்டு தனியார் மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில், சிகிச்சை முடிந்து நேற்று இரவு வீடு திரும்பியுள்ளனர்.
அப்போது வீட்டிற்குச் செல்ல பாடகம் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் மகன் பாலாஜி (23) ஓட்டிய காரில் சென்றுள்ளனர். மேலும் காரில் விஜயலெட்சுமி (43), விஜயலெட்சுமியின் தாய் மல்லிகா (60), மகள் வித்யா (23) ஆகியோர் சென்றுள்ளனர். அப்போது கார் சேத்துப்பட்டு - போளூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, கிழக்கு மேடு கருங்கல்மேடு அருகே காரின் டயர் திடீரென வெடித்துள்ளது.
எதிர்பாராத விதமாக காரின் டயர் வெடித்ததால், கட்டுப்பாட்டை இழந்த கார், எதிரே போளூரில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் காரில் பயணித்த 4 பேரும் பலத்த காயம் அடைந்துள்ளனர். அதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்து, பின்னர் காயமடைந்த நபர்களை உடனடியாக மீட்டு, சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.