திருச்சி:தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக திருச்சியில் இருந்து இரு சக்கர வாகனத்தில் சென்ற, திருச்சி இளைஞர் அணி தலைவர் சீனிவாசன் மற்றும் இளைஞர் அணி துணை செயலாளர் உறையூர் கலை ஆகியோர் சாலை விபத்தில் உயிரிழந்தனர்.
தொடர்ந்து அவர்களது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு இன்று திருச்சியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திருச்சி உறையூரில் உள்ள கலை அவர்களின் இல்லத்திற்கு நேரில் வந்து மாலை அணிவித்து கண் கலங்கியபடி அஞ்சலி செலுத்தினார்.
அதன் பின் அங்கிருந்து திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள இளைஞரணி செயலாளர் சீனிவாசனின் இல்லத்திற்கு புஸ்ஸி ஆனந்த் புறப்பட்டு சென்றார். இது குறித்து உயிரிழந்த கலையின் உறவினர்கள் கூறுகையில்," பல ஆண்டுகளாக விஜய்யின் ரசிகராக இருந்த கலை நேற்று அவரது மாநாட்டிற்கு செல்லும் பொழுது விபத்தில் உயிரிழந்தார். இந்த செய்தியை கேள்விப்பட்ட விஜய் ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என்றும் இவர் முதலமைச்சராகி என்ன செய்யப் போகிறார் என கேள்வி எழுப்பினர்.