சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஆலோசனைக் கூட்டம் போரூர் அடுத்த கொளப்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில், தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.
பின்னர் அவர் பேசுகையில், "இந்த ஆலோசனைக் கூட்டம் இன்று வைத்துக் கொள்ளலாம் என்று கூறிய நிலையில், உங்கள் அனைவருக்கும் மெசேஜ் அனுப்பினார். இந்த ஒரு மெசேஜ்காக வந்த கூட்டம்தான் இது. வேறு யாருக்காவது கூட்டம் கூடுமா? நமது கட்சியினர் ஐந்து கார்கள், 10 கார் வைத்துள்ளார்களா இல்லை. கூலி வேலை, ஆட்டோ ஓட்டுகிறவர்கள் தான்.
எல்லோரும் சொல்லலாம், ஆறு மாதம் இந்த கட்சி இருக்கும் என்று. இது தமிழக வெற்றிக் கழகம், கொடி எங்கு பார்த்தாலும் பறந்து கொண்டிருக்கிறது. எல்லாரும் சொல்வார்கள், நாங்கள் எல்லாம் செய்து விட்டோம், ஓட்டு போடுங்கள் என்று கேட்பார்கள். கடந்த 30 வருடமாக உழைத்துக் கொண்டு இருக்கிற ஒவ்வொரு தொண்டனும், ஒவ்வொரு தோழனும் இருந்து கொண்டிருக்கிற கட்சி நமது தமிழக வெற்றிக் கழகம் தான்.
கூட்டத்திற்கு கும்பலாக வாருங்கள் என்று கூப்பிட வேண்டிய அவசியம் இல்லை. விஜய்க்காக கூட்டம் சேர்ந்து விடும். ஆலோசனைக் கூட்டம் என்பது அனைவரையும் பத்திரமாக அழைத்துச் செல்ல வேண்டும் என்பதற்காகத்தான். விஜய் முகத்தைக் காட்டினாலே கூட்டம் வந்துவிடும். தமிழகமே திரும்பிப் பார்க்கின்ற வெற்றி மாநாடாக இருக்கிறது.