திருநெல்வேலி :வாகைகுளம் அரசு உதவிபெறும் பள்ளியில் புத்தகங்கள். நாற்காலி மற்றும் ஆவணங்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துள்ள சம்பவம் குறித்து மானூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருநெல்வேலி, மானூர் தாலுகாவிற்கு உட்பட்ட வடக்கு வாகைகுளம் பகுதியில் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த சுமார் 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
பள்ளியில் ஆவணங்கள் தீ வைத்து எரிப்பு (Credits - ETV Bharat Tamil Nadu) இந்நிலையில், இன்று தீபாவளி பண்டிகை முடித்து பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், வடக்கு வாகைக்குளம் நடுநிலைப் பள்ளிக்கு வந்த தலைமையாசிரியர் ஞானராஜ், இரண்டு வகுப்பறைகளில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளின் நோட்டு புத்தகங்கள், பள்ளி ஆவணங்கள், நாற்காலி உள்ளிட்ட பொருட்கள் தீயில் கருகிக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இது குறித்து அவர், மானூர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியும் தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தியுள்ளார்.
இதையும் படிங்க:இரும்பு கட்டில் கால் உடைந்து விழுந்த விபத்தில் தந்தை, மகன் உயிரிழப்பு.. திண்டுக்கல்லில் சோகம்!
தீபாவளி விடுமுறையின்போது பள்ளி வளாகத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் வளாகத்தை தவறான செயல்களுக்கு பயன்படுத்தி, பின்னர் தீ வைத்து சென்றனரா? அல்லது அக்கம் பக்கத்தில் பட்டாசுகள் வெடித்த போது அதன் தீப்பிழம்பு பள்ளிக்குள் சென்றதில் தீ விபத்து ஏற்பட்டதா? திட்டமிட்ட சதியாா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனிடையே வகுப்பறையில் தீ வைத்த சம்பவம் நடைபெற்று காவல்துறையின் விசாரணை நடைபெற்று வருவதால் மாணவ, மாணவிகள் பள்ளியின் கலையரங்கில் அமர வைக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்