மதுரை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றுள்ள நிலையில், 19 காளைகளை அடக்கி திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த மாடுபிடி வீரர் கார்த்திக் முதலிடம் பிடித்து வெற்றிப் பெற்றுள்ளார். அவருக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த ரூ.8 லட்சம் மதிப்புள்ள காரை பரிசாக வழங்கி அமைச்சர் மூர்த்தி கௌரவித்தார்.
தை முதல் நாள் பொங்கல் பண்டிகை தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று ஜனவரி (14) செவ்வாய்க்கிழமை காலை 6.30 மணிக்கு தொடங்கியது. இந்தப் போட்டியை தமிழக பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் முதலில் 10 தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்றன. இதில் மொத்தம் 850 க்கும் மேற்பட்ட காளைகளும், 900 மாடுபிடி வீரர்களும் களமிறங்கி விளையாடினர். ஒவ்வொரு சுற்றிலும் சிறப்பாக விளையாடியவர்களில் மூன்றிலிருந்து ஐந்து வீரர்கள் என மொத்தம் 30 வீரர்கள் இறுதிச்சுற்றிற்கு தேர்வாகினர்.
இறுதிச்சுற்றில் 19 காளைகளை அடக்கி திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த மாடுபிடி வீரர் கார்த்திக் முதலிடம் பிடித்தார். அவருக்கு தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த ரூ.8 லட்சம் மதிப்புள்ள கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. அதனை அமைச்சர் மூர்த்தி வழங்கி சிறப்பித்தார்.