திருப்பத்தூர்:பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு கிராமங்களில் ஜல்லிக்கட்டு, எருது விடும் விழா நடைபெற்று வருகிறது. பொங்கலை முன்னிட்டு துவங்கியுள்ள எருது விடும் திருவிழா வரும் மார்ச் மாதம் வரை நடைபெற உள்ளது. இதில், திருப்பத்தூர் மாவட்டத்தில் இதுவரையில் 7 பகுதிகளில் எருது விடும் விழா நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
அந்த வகையில், நேற்று (ஜனவரி 17) வெள்ளிக்கிழமை மாவட்டத்தின் முதல் போட்டி வெள்ளக்குட்டை கிராமத்தில் நடைபெற்றுள்ளது. இரண்டாவது நாளாக இன்று (ஜனவரி 18) சனிக்கிழமை பெரிய கசிநாயக்கன்பட்டி கிராமத்தில் 42-ஆம் ஆண்டு மாபெரும் எருது விடும் வெகு விமரிசையாக நடைபெற்றுள்ளது. இதனை, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா ஆகியோர் விழா குழுவினருடன் உறுதி மொழி ஏற்று, கொடி அசைத்து தொடங்கி வைத்துள்ளார்.
இப்போட்டியில், திருப்பத்தூர் மாவட்டம் மட்டுமல்லாது ஆம்பூர், வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர் மற்றும் ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் சுமார் 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று களத்தில் சீறிப்பாய்ந்துள்ளன.
இதையும் படிங்க:சோழவரத்தில் களைகட்டிய மஞ்சுவிரட்டு விழா.. களத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்!